ADDED : பிப் 15, 2024 04:54 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு நலவழித்துறை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஸ்பார்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் நமச்சிவாயம் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சாருமதி, செவிலியர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா (பொறுப்பு) பேசும்போது, 'ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினமான ஜனவரி- 30ம் தேதி, தொழுநோய் விழிப்புணர்வு இயக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெளிறிய அல்லது சிவந்த, தொடு உணர்ச்சி மற்றும் அரிப்பு இல்லாத தேமல்கள் இருந்தால், தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். நிகழ்ச்சியில், சுகாதார உதவியாளர்கள் சிவக்குமார், ஜெகநாதன், ஆசிரியர்கள் ஜெஸ்ஸி, டெல்பின் மேரி, நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

