சிறிய காந்தங்களை பயன்படுத்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மியாட் மருத்துவமனை சாதனை
சிறிய காந்தங்களை பயன்படுத்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மியாட் மருத்துவமனை சாதனை
ADDED : ஜூலை 08, 2026 12:52 AM

புதுச்சேரி: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பித்தநீர் குழாய் அடைப்பு ஏற்பட்ட வெளிநாட்டு நோயாளிக்கு, சிறிய காந்தங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்து, சென்னை மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கிர்கிஸ்தானை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் 43 வயதான தாய்க்கு, மியாட் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 15 மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணிற்கு, கடுமையான அரிப்பு மற்றும் மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது பித்தநாளம் முழுதும் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் தொற்று ஏற்பட்டு, மாற்றப்பட்ட கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
இதையடுத்து, கல்லீரலை பாதுகாக்க வெளிப்புற வடிகால் வடிகுழாய் பொருத்தப்பட்டது. இந்த குழாய் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்காக, பாதுகாப்பான மாற்று வழியை கண்டறிந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக் குழுவினர் அடங்கிய 'மேக்னடிக் கம்ப்ரஷன் அனஸ்டோமோசிஸ்' என்ற இரண்டு சிறிய காந்தங்களை பயன்படுத்தும் புதுமையான தொழில்நுட்பத்தைத் பயன்படுத்த திட்டமிட்டனர்.
அதன்படி, சிகிச்சை முறையில் கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் எண்டோஸ்கோப் மூலம் குடலுக்குள் ஒரு காந்தத்தை பொருத்தினர். இரண்டாவது காந்தகம் உடலுக்கு வெளியே வடிகால் பாதை வழியாக ஒரு இன்டர்வென்ஷனல் ரேடியலஜிஸ்ட் மூலம் செலுத்தப்பட்டது. காந்தங்கள் அடைபட்ட பித்தநீர் குழாயின் இருபுறமும் கவனமாக நிலை நிறுத்தப்பட்டன.
காலப்போக்கில், காந்தங்களின் ஈர்ப்பு சக்தியால் அவற்றுக்கு இடையே இருந்த தழும்புத் திசுக்கள் அழுத்தப்பட்டு, படிப்படியாக அடைப்பட்ட பகுதியின் வழியாக ஒரு புதிய பாதை உருவானது. இதனால் பித்தநீர் மீண்டும் இயற்கையாகப் பாயத் தொடங்கியது.
இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, பெண்ணிற்கு பொருத்தப்பட்ட வெளிப்புற வடிகால் குழாய் அகற்றப்பட்டது. தற்போது அவர், ஆரோக்கியமான கல்லீரலுடன் தனது அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
