அரசியலமைப்பு சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை: முன்னாள் எம்.பி., குற்றச்சாட்டு
அரசியலமைப்பு சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை: முன்னாள் எம்.பி., குற்றச்சாட்டு
ADDED : நவ 27, 2026 09:08 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசியலமைப்பு சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் நேற்று (நவ.,26) கவர்னர் அலுவலகம், தலைமை செயலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் கொண்டாடப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், முழுமையான ஜனநாயகம், கூட்டாட்சி, தன்னாட்சி போன்ற பண்புகளுடன் ஆட்சி நடக்க வேண்டும் என, வலியுறுத்துகிறது.
ஆனால் புதுச்சேரியில் இக்கோட்பாடுகள் நடைமுறையில் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, நாட்டில் மத்திய, மாநில, உள்ளாட்சி என மூன்று அடுக்கு அரசுகள் செயல்பட வேண்டும்.
ஆனால் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல், கல்வி பெறும் உரிமை சட்டம் செயல்படுத்தப்படவில்லை. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகத்திற்கு ஆளுநர் குழு அமைக்கப்படவில்லை. சட்டத்தை மீறி வேண்டியவர்களுக்கு சலுகைகள், வேலைவாய்ப்புகள், நிவாரணங்கள் நிதியுதவிகள், மானியங்கள் வாரி வழங்கப்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
