மகாபலிபுரம் - புதுச்சேரி இ.சி.ஆர்., 108 கி.மீ., விரிவாக்கப்பணி இரண்டு கட்டங்களில் 62 கி.மீ., துாரத்திற்கு 75 சதவீதம் நிறைவு
மகாபலிபுரம் - புதுச்சேரி இ.சி.ஆர்., 108 கி.மீ., விரிவாக்கப்பணி இரண்டு கட்டங்களில் 62 கி.மீ., துாரத்திற்கு 75 சதவீதம் நிறைவு
ADDED : நவ 23, 2026 04:46 AM
மகாபலிபுரம் - புதுச்சேரி இ.சி.ஆர்., 108 கி.மீ., விரிவாக்கப்பணி
இரண்டு கட்டங்களில் 62 கி.மீ., துாரத்திற்கு 75 சதவீதம் நிறைவு
மரக்காணம் - அரியூர் வரை 46 கி.மீ., பணி துவங்க 3 மாதங்களாகும்
-நமது நிருபர்-
மகாபலிபுரம் -புதுச்சேரி இடையேயான இ.சி.ஆர்., விரிவாக்க பணியில் இரு கட்டங்களாக, 62 கி.மீ., துாரத்திற்கு, 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மரக்காணம் - அரியூர் வரையிலான, 46 கி.மீ., துார சாலை விரிவாக்கப் பணி மூன்று மாதங்களில் துவங்கப்படும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 777 கி.மீ., துாரத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்.,) அமைந்துள்ளது. இச்சாலையில், புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் வரை பல இடங்களில் வளைவுகள் இருந்ததால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இருவழிச்சாலை என்பதால் பயணம் நேரமும் கூடுதலாகி, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.
108 கி.மீ., நான்குவழிச்சாலை
அதனால், மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி, அரியூர் வரை 108 கி.மீ., துாரத்திற்கு இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (நகாய்) நடவடிக்கை எடுத்தது. இதில் சாலை விரிவாக்க பணிக்கு மகாபலிபுரத்தில் இருந்து முகையூர் வரை, 31 கி.மீ., துாரத்திற்கு ரூ.1,360.53 கோடி, முகையூரில் இருந்து மரக்காணம் வரை, 31 கி.மீ., துாரத்திற்கு ரூ.1,116.13 கோடி, மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி அரியூர் வரை, 46.05 கி.மீ., துாரத்திற்கு, ரூ. 2,157.09 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, மூன்று கட்டங்களாக பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டது.
மகாபலிபுரம் - முகையூர்
மகாபலிபுரம் - முகையூர் இடையே 31 கி.மீ., சாலை விரிவாக்கப் பணி கடந்த 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது. இச்சாலையில், 2 மெகா சைஸ் மேம்பாலங்கள், 6 மேம்பாலங்கள், 8 சப்-வே பாலங்கள், 69 பாக்ஸ் கல்வெர்ட், 5 சிலாப் கல்வெர்ட்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், கூவத்துார் அடுத்த ஒதியூர் கழிமுக பகுதிக்கான தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதி மற்றும் கடலோர மண் உறுதிப்படுத்தல் சவால் காரணமாக பணி தாமதமானது.
இதனால், இத்திட்டத்தை 2027ம் ஆண்டு ஜன., 31ம் தேதிக்குள் முடிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தற்போது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், சாலை பணிகள் வேகமெடுத்துள்ளன. இதனால், 1 மெகா மேம்பாலம், 6 மேம்பாலங்கள், 8 சப்-வே பாலங்கள், 65 பாக்ஸ் கல்வெர்ட்கள், 5 சிலாப் கல்வெர்ட் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. இச்சாலையில் கடந்த மாதம் வரை 76.95 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
முகையூர் - மரக்காணம்
முகையூர் - மரக்காணம் வரையிலான, 31 கி.மீ., துார சாலை பணி கடந்த, 2023ம் ஆண்டு டிச., 7ம் தேதி துவங்கி, 2025ம் ஆண்டு டிச., 5ம் தேதி முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது, இச்சாலையில், 3 மெகா மேம்பாலங்கள், ஒரு மேம்பாலம், 11 சப்வே பாலங்கள், 63 பாக்ஸ் கல்வெர்ட்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணி துவங்கியது.
இச்சாலையிலும், நில எடுப்பு மற்றும் மண் தட்டுப்பாட்டால் பணியில் மந்தம் ஏற்பட்டதால், 2027ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க கெடு நீட்டிக்கப்பட்டது. தற்போது, நில எடுப்பு மற்றும் மண் பிரச்னைக்கு தீர்வுகாணப்பட்டதால் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில், 9 சப்வே பாலங்கள் முழுமையாக கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள மேம்பாலங்கள் மற்றும் பாலங்கள் கட்டுமான பணி நடந்து வருகிறது. இச்சாலையில் கடந்த மாதம் வரை 68.39 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது.
மரக்காணம் - அரியூர்
மரக்காணம் - அரியூர் வரை 46.05 கி.மீ., துாரம் புதிய புறவழிச்சாலையும், கூனிமேடு முதல் புதுச்சேரி மாநிலம் அரியூர் வழியாக விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வரை இணைப்பு சாலையும் அமைக்கப்படுகின்றன. இச்சாலையில் 7 மெகா மேம்பாலங்கள், 12 மேம்பாலங்கள், 123 பாக்ஸ் கல்வெர்ட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கானடெண்டர் விடும் பணி முடிந்து, நில எடுப்பு பணி 60 சதவீம் முடிந்துள்ளது. ஆனால், 80 சதவீதம் முடிந்தால் மட்டுமே ஒப்பந்த நிறுவனம், சாலை பணியை துவங்க முடியும். அதனால், மீதமுள்ள 20 சதவீதம் நில எடுப்பு பணியை அடுத்த மூன்று மாதத்திற்குள் முடித்து, சாலை பணி துவக்கப்படவுள்ளது. இப்பணி துவங்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தரத்தில் மேம்பாலங்கள்
மகாபலிபுரத்தில் இருந்து மரக்காணம் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு, 95 சதவீதம் நிலம் எடுப்பு பணிகள் முடிந்துள்ளது.
நில எடுப்பு முடிந்த இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் தார் சாலை பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
மரக்காணம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு இணைப்பு சாலை பணி நடந்து வருகிறது. இங்கு மேம்பாலத்தில் இருந்து சாலையை இணைக்கும் பகுதியின் இருபுறங்களிலும் வழக்கமான சிமெண்ட் சிலாப்கள் அமைக்காமல், கருங்கற்களால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கருங்கற்களை பெல்ட், கம்பி வலைகள் மூலம் பாதுகாப்புடன் அமைத்துள்ளனர். இதேபோன்று, பல இடங்களில் மேம்பாலங்களின் இணைப்பு சாலையோரங்களில் கருங்கற்களை பதிக்காமல், மண் அரிப்பை தடுக்கும் வகையில் புற்களை நட்டுள்ளனர்.
தேன்பாக்கத்தில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணி முடிந்து, ஒருபுறத்தில் இணைப்பு சாலை பணி நடந்து வருகிறது. மறுபுறம் இணைப்பு சாலை பணி துவங்காமல் உள்ளது.
வெண்ணாங்குப்பட்டில் மேம்பாலம் கட்டுமான பணி முடிந்து, இணைப்பு சாலை பணி நடக்காமல் கிடப்பில் உள்ளது.
விளம்பூரில் மெகா மேம்பாலம் மற்றும் இணைப்பு சாலை பணி, 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. முதலியார்குப்பம் புறவழிச்சாலை துவங்கும் பகுதியில் மேம்பாலம் பணி முடிந்து இணைப்பு சாலை பணி நடந்து வருகிறது. பரமகிரியில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணி முடிந்து அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. தற்போது இங்கு இணைப்பு சாலை பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு, சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
சிக்கணாங்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில் மேம்பாலத்திற்கான ராட்சத துாண்கள் அமைக்கப்பட்டு இணைப்பு துாண்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. முகையூரில் மேம்பாலம், சப்வே பாலம், கல்வெர்ட் பாலம், கூவத்துார் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. மேல்பெருமாள்சேரியில் சப்வே பாலத்திற்கான பணி நிறைவடைந்துவிட்டது. மறுபுறத்தில் இணைப்பு சாலைக்கு மணல் கொட்டி சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது.
பயண நேரம் குறையும்
மகாபலிபுரம் முதல் மரக்காணம் வரையிலான, 62 கி.மீ., துாரம் சாலை விரிவாக்கத்தில் பணி நிறைவடைந்த பகுதிகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த 62 கி.மீ., துாரம் சாலை விரிவாக்கப் பணியை வரும் ஏப்., 2027ல் முழுவதுமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
மகாபலிபுரம் - புதுச்சேரி வரையிலான 108 கி.மீ., துாரமுள்ள இச்சாலை திட்டம் முழுமையாக நிறைவடைந்தால், சென்னை - புதுச்சேரி இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும்.
எனவே, மகாபலிபுரம் - மரக்காணம் வரையிலான சாலையில் மீதமுள்ள பணியையும், மரக்காணம் - அரியூர் வரையிலான சாலை விரிவாக்கப் பணியை துரிதமாக துவங்கவும் நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் கட்டடம், நிலம்
புதுச்சேரி - மரக்காணம் சாலையின் மையத்தில் கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் உள்ளது. இதனால், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வாகனங்கள் வளைந்து செல்கின்றன. இதேபோன்று, கடப்பாக்கத்திலும் நிலம் உள்ள பகுதியில் விரிவாக்கப்பணி மேற்கொள்ளாததால், வாகனங்கள் வளைந்து சென்று வருகின்றன.
இதுகுறித்து நகாய் அதிகாரிகள் உரிய தகவல் தெரிவிக்கவில்லை.
மலைபோல் குவிக்கப்படும் மண்
மரக்காணம் - அரியூர் வரையிலான சாலை பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், பணி ஆணை வழங்கவில்லை. இந்நிலையில், டெண்டர் எடுத்த நிறுவனம் தற்போது சாலை பணிக்கு தேவையான மண்ணை பல இடங்களில் மலைபோல் குவித்து வருகின்றனர். இதில், அரசு மண் எடுக்க கொடுத்த அனுமதியை விட அதிகளவில் மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
சாலையோர தடுப்புகள் அவசியம்
மகாபலிபுரம் - புதுச்சேரி வரையிலான சாலையில் கூட்டம், கூட்டமாக மாடுகள் திடீரென குறுக்கே செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும், பொதுமக்கள் திடீரென சாலையை கடப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில் மாடுகள் மற்றும் பொதுமக்கள் சாலையின் குறுக்கே புகுவதை தடுக்க சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
