/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி பெங்களூருவில் கைது
/
கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி பெங்களூருவில் கைது
கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி பெங்களூருவில் கைது
கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி பெங்களூருவில் கைது
ADDED : ஜூன் 15, 2025 06:47 AM

புதுச்சேரி: கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் இன்ரான் பாஷாவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன், 70. இவரை கடந்த 2023ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே (Hashpe) என்ற இணையதள பக்கத்தில் ரூ. 98 லட்சம் முதலீடு செய்தார்.
அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ. 2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி (டி.சி.எக்ஸ் காயின்) இருந்தது. அதை விற்று பணமாக தனது வங்கி கணக்கிற்கு மாற்ற அசோகன் முயற்சித்தபோது, இணையதள பக்கம் முடக்கப்பட்டது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அசோகன் அளித்த புகாரின் பேரில், எஸ்.பி., பாஸ்கரன் தலைமையிலான போலீஸ் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், கோயம்புத்துாரை தலைமை இடமாக கொண்டு சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்கள் மூலம் கடந்த 2021ம் ஆண்டு ஆஷ்பே (ட்ரோன் கனெக்ட்) பிரமாண்ட துவக்க விழா நடந்தது.
இதன் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேர் ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ. 3.60 கோடியை இழந்ததும், இந்தியா முழுதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்து ஒரே நாளில் கிரிப்டோ கரன்சியை மதிப்பில்லாமல் செய்து பணத்தை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான குழுவினர் கோயம்புத்துாரை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின், 36; அரவிந்த்குமார், 40; ஆஷ்பே என்ற இணையதளத்தை உருவாக்கிய தாமோதரன், 52; ஆகியோரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், 3 செல்போன் ஒரு லேப்டாப், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட கோயம்புத்துாரைச் சேர்ந்த அலுமினிய பொருட்கள் தயாரிப்பு நிறுவன இயக்குநர் பாபு என்ற சையது உஸ்மான், 51; என்பவரை கடந்த மாதம் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் கோயம்புத்துாரை சேர்ந்த இம்ரான் பாஷா, 37; என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
அவரை புதுச்சேரி அழைத்து வந்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
நடிகைகளுக்கு பணம் வழங்கல்
கோயம்புத்துாரை தலைமை இடமாக கொண்டு, நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் கடந்த 2021-ல் 'ஆஷ்பே' (ட்ரோன் கனெக்ட்) நிறுவனம் துவங்கப்பட்டது. இதற்காக தமன்னாவுக்கு ரூ. 34 லட்சமும், காஜல் அகர்வாலுக்கு ரூ.28 லட்சமும் மோசடி செய்யப்பட்ட மக்கள் பணத்தில் இருந்து வழங்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேல் அதிகாரிகள் அனுமதியுடன் மேல் விசாரணை நடத்தப்படும் என, சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.