/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலம் கடந்தும் கம்பீரமாய்... பிரமாண்ட பிரெஞ்சு வங்கி மாளிகை
/
காலம் கடந்தும் கம்பீரமாய்... பிரமாண்ட பிரெஞ்சு வங்கி மாளிகை
காலம் கடந்தும் கம்பீரமாய்... பிரமாண்ட பிரெஞ்சு வங்கி மாளிகை
காலம் கடந்தும் கம்பீரமாய்... பிரமாண்ட பிரெஞ்சு வங்கி மாளிகை
ADDED : அக் 13, 2024 07:28 AM

புதுச்சேரி பாரதி பூங்காவின் தென்மேற்கு பகுதியில், அன்னைதெரசா சிலை சதுக்கத்தின் எதிரே கிழக்கு மேற்காக செல்லும் நீண்ட சாலையின் பெயர், த லபூர்தொனோ வீதி. அச்சாலையில், புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை தொடுமிடுத்தில் பிரமாண்டமான வெள்ளை மாளிகையாக நிற்பது, யூகோ வங்கி கட்டடம்.
இது, இப்போது மட்டுமல்ல, பிரெஞ்சு காலத்திலும் வங்கி மாளிகை திகழ்ந்து, பிரெஞ்சியர் காலத்தின் பொருளாதாரத்தை நிர்வகித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாகும். வங்கி கணக்குகளை பராமரித்துடன் நாணயம், பணத்தாள்களையும் அச்சடித்த பெருமை பெற்றுள்ளது.
பிரெஞ்சியர் புதுச்சேரியை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தபோது, ஆரம்ப காலத்தில், பிரிட்டிஷாரின் ஒரியண்ட் வங்கி கிளை ஒன்று மட்டுமே புதுச்சேரியில் செயல்பட்டு வந்தது.
அந்த நிலையில் கடந்த 1875ல் மார்ச் 2ம் தேதி பாரீசை தலையிடமாக கொண்ட இந்தோ - சீனா வங்கி ஒன்று புதுச்சேரியில் தனது கிளையை துவங்கியது.
முதலில் வர்த்தக சபை கட்டடத்தில் இயங்கி வந்த இந்த வங்கி, 1920ல் தற்போதுள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்தோ - சீனா வங்கி வந்த பிறகு ஒரியண்டல் கிளை தனது செல்வாக்கை இழந்து மூடப்பட்டது.
புதுச்சேரி இந்தியாவுடன் இணைப்பதற்கான போராட்டம் நடந்தபோது, இந்திய யுனைடெட் கமர்சியல் வங்கி எனும் யூகோ வங்கி கிளை 06.12.1948ல் துவங்கப்பட்டது. அதன் பின், இந்தோ - சீனா வாங்கி தனது முக்கியத்துவத்தை இழந்து, 1955 மார்ச் மாதம் புதுச்சேரியில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறியது. அத்துடன் அதனுடைய சொத்து, வங்கி கணக்குகளை யூகோ வாங்கியிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றுக்கொண்டது.
1916ல் கட்டப்பட்ட இக்கட்டடம், பிரெஞ்சு கட்டட அமைப்பினை சேர்ந்தது. பித்தளை முனையுள்ள படிக்கட்டுளும், 20 பெரிய உட்புற துாண்களும், நிலவறை, தரைத்தளம், மேல்மாடி என பிரமாண்டமான பெரிய மாளிகை இது.
இன்றைக்கும் சிறிதும் பழுது அடையாமல் பிரெஞ்சு கட்டட பாணியை கம்பீரமாக பறைசாற்றி வருகிறது. இந்த கட்டடத்தை பழமை மாறாமல் யூகோ வங்கி அப்படியே பாராமரித்து பேணி பாதுகாத்து வருகின்றது.
அதன் தொடர்சியாக தான், இந்திய வம்சாவழியினரான பிரெஞ்சு குடிமக்கள் இன்றைக்கும் இதே வங்கியில் வங்கி கணக்குடன் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.