/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புல்வார்டில் கால்வாய் பணிக்காக பிரதான சாலைகள் மூடல்: போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி
/
புல்வார்டில் கால்வாய் பணிக்காக பிரதான சாலைகள் மூடல்: போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி
புல்வார்டில் கால்வாய் பணிக்காக பிரதான சாலைகள் மூடல்: போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி
புல்வார்டில் கால்வாய் பணிக்காக பிரதான சாலைகள் மூடல்: போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : டிச 27, 2024 06:13 AM

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி முழு வீச்சில் தயாராகி வரும் சூழ்நிலையில் முக்கிய வீதிகளை பொதுப்பணி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் குதறிபோட்டு மறித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு களை கட்டும். இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி முழு வீச்சில் தயாராகி வருகிறது.
ஓட்டல்கள், விடுதிகளில் அறைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. அரசு சார்பிலும், தனியார் ஓட்டல்கள், தனி நபர்கள் சார்பிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் சாரை சாரையாக குவிந்து வருகின்றனர். இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை உச்சக்கட்டமாக்கும் வகையில், புல்வார்டு பகுதியில் சாலை, வாய்க்கால் பணிக்காக ஆங்காங்கே சாலையை மறிக்கப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, புஸ்சி வீதியில் பாதி ரோடு கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டுள்ளது. நீடராஜப்பையர் வீதி-சின்னசுப்புராயப்பிள்ளை வீதி சந்திப்பு, அம்பலத்தடையார் மடத்து வீதி, மிஷன் வீதி முதல் காந்தி வீதி வரை, சவுரிராயலு வீதி-சின்னசுப்புராயப்பிள்ளை வீதி என முக்கிய வீதிகள் அனைத்தும் சாலை, வாய்க்கால் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன.
இதனால் பிற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. உள்ளே சென்று வெளியே வர முடியாமல் சுற்றுலா பயணிகள் திணறி வருகின்றனர்.
உலக அளவில் சுற்றுலா பட்டியலில் புதுச்சேரி இடம் பெற்றுள்ள சூழ்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புல்வார்டு பகுதியில் இந்தாண்டு 4 லட்சம் பேர் வரை திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, நகர சாலைகளை அடைத்துள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை, வாய்க்கால் புதுச்சேரி நகராட்சி, பொதுப்பணித் துறையினர் மேம்படுத்துவதில் தவறில்லை.
அதனை, புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு ஆரம்பித்து இருக்கலாம். ஆனால் எந்த திட்டமிடலும் இல்லாமல் பணிகள் ஆரம்பித்து, ஆமை வேகத்தில் நடந்து வருவதால், புல்வார்டு சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை கவனத்தில் கொண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளையும் இவ்விஷயத்தில் ஒருங்கிணைக்க வேண்டும்.

