ADDED : ஏப் 25, 2026 08:06 PM

வில்லியனுார்: உலக மலேரியா தினத்தை முன்னிட்டு வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் இளையதாசன், பெண் சுகாதார மேற்பார்வையாளர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
முகாமில், டாக்டர் பாமகள்கவிதை பேசுகையில், 'மலேரியா கிருமிகள் (பிளாஸ்மோடியம்) தாக்குவதால் கல்லீரல், மண்ணீரல், மூளை, சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படும். முறையான சிகிச்சை பெற தவறினால் இறப்பும் ஏற்படும். அனாபிலிஸ் என்ற பெண் கொசுக்கள் மூடப்படாத கிணறு, மூடப்படாத மேல்நிலைத் தொட்டி, மூடப்படாத கீழ்நிலைத் தொட்டி உள்ளிட்ட தண்ணீர் நீண்ட நாட்கள் தேங்கி நிற்கும் இடங்களில் உற்பத்தியாகிறது. கொசுக்களால் பரவும் மலேரியா காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, உள்ளிட்டவை மலேரியா காய்ச்சலின் அறிகுறியாகும். ரத்தப் பரிசோதனை செய்து, மலேரியா காய்ச்சலை கண்டறிந்து, டாக்டரின் ஆலோசனையால் முற்றிலும் குணப்படுத்தலாம்' என்றார்.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், விமல், கலையரசி மற்றும் கோமதி ஆகியோர் செய்தனர்.

