ADDED : செப் 29, 2026 09:02 PM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் பெண்ணின் உள்ளாடைகளை திருடிச் சென்று, பாழடைந்த வீட்டில் தொங்கவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை, சிங்கிலி நாயக்கர் வீதியில் ஒரு பெண்ணின் வீட்டில் சமீபகாலமாக வெயிலில் காய வைக்கப்பட்டு இருந்த துணி மற்றும் உள்ளாடைகள் தொடர்ந்து மாயமாகி வந்தது.
சந்தேகமடைந்த அப்பெண், தனது வீட்டின் பக்கத்தில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு பெண்களின் உள்ளாடைகள் சிதறி கிடந்தது. சில உள்ளாடைகளை அங்குள்ள சுவற்றின் ஆணியில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த இடத்தில் ஏராளமான காலி மதுபான பாட்டில்களும் குவிந்து கிடந்தது. இது குறித்து அப்பெண் முதலியார்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், முதலியார்பேட்டை, உடையார்தோட்டம், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த வேணு, 44; என்பவர் அப்பகுதியில் மது அருந்துவிட்டு, பெண்ணின் ஆடைகளை திருடி பாழடைந்த வீட்டிற்குள் தொங்கவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வேணுவை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
