/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் ஸ்டாண்ட், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் மெகா ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'பகீர்' குற்றச்சாட்டு
/
பஸ் ஸ்டாண்ட், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் மெகா ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'பகீர்' குற்றச்சாட்டு
பஸ் ஸ்டாண்ட், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் மெகா ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'பகீர்' குற்றச்சாட்டு
பஸ் ஸ்டாண்ட், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் மெகா ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'பகீர்' குற்றச்சாட்டு
ADDED : நவ 22, 2024 05:37 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமிவலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. பொதுப்பணித்துறையில் 30 சதவீதம் கமிஷன், ரெஸ்டோபார், சிகப்பு ரேஷன்கார்டு என அடுக்கடுக்காக மூன்றாண்டாக குற்றம் சாட்டி வருகிறோம். இதற்கு, முதல்வர், அமைச்சர்கள் பதில் கூறவில்லை. ஒரு அமைச்சர் மட்டும் நான் ஆதாரமின்றி கூறுவதாக தெரிவித்துள்ளார். இப்போது ஆதாரத்துடனே புகார் சொல்கிறேன். பொதுப்பணித்துறையில் விஞ்ஞான ரீதியில் ஊழல் நடந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது.
புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட் புனரமைக்க ரூ.15 கோடியில் திட்டமிடப்பட்டது. அதன் பிறகு இந்த ஆட்சியில் அடுக்குமாடி கடைகளுடன் பஸ்நிலையம் சீரமைக்க ரூ.47 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. அடுக்குமாடி கடையை கைவிட்டு, தரை தளத்துடன் கடைகளுடன் ரூ.29 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.
இப்பணிக்கான டெண்டரை எடுத்த தேசிய கட்டுமான நிறுவனத்திடம், சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சப் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய பஸ் நிலையத்தில் 46 பஸ்கள், 31 கடை, ஒரு உணவகம், முன்பதிவு அலுவலகம், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியை யார் ஆய்வு செய்தாலும் ரூ. 15 கோடிக்குள் செய்து முடிக்கலாம் என்பார்கள். இதில் மட்டும் ரூ.14 கோடி ஊழல் நடந்துள்ளது.
அதேபோல காங்., ஆட்சியில் வாழைக்குளத்தில் 219 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு 370 சதுர அடியில் கட்டி கொடுத்தோம். ஒரு வீடு கட்ட ரூ.9.6 லட்சம் என ரூ.20 கோடி செலவானது. குமரகுரு பள்ளத்தில் புதிய முறையில் 220 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.45.5 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளனர். 12 மாடி கட்டடத்தை சிலாப் முறையில் கட்டுகின்றனர்.
ஒரு வீடு கட்ட ரூ.21.50 லட்சம் செலவாகியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் செலவினம் குறைய வேண்டும். ஆனால் இங்கு கூடியுள்ளது. அதிகபட்சம் ரூ.30 கோடியில் கட்டுமான பணியை முடித்திருக்கலாம். இதில் ரூ.15 கோடி ஊழல் நடந்துள்ளது.
பாதாள சாக்கடை சீரமைப்புக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். இதனை யாராவது நம்புவார்களா? அமைதியான முறையில் ஊழல் தொடர்கிறது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஊழல்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுத உள்ளேன்.
காரைக்கால் துறைமுகத்தை தொடர்ந்து தற்போது, மின்துறையை தாரைவார்க்க அனைத்து நடவடிக்கையும் முடிந்துவிட்டது. மின்துறை நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் கூறி வருகிறார். நகராட்சி, கொம்யூன், தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண நிலுவை மட்டும் 8 சதவீதம் உள்ளது. இதை வசூலித்தாலே நஷ்டம் இருக்காது.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பங்கேற்ற விழாவில் 6 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். தன்மானமின்றி ஒரு எம்.எல்.ஏ., அவரது காலில் விழுந்தார். போலி என்.ஆர்.ஐ., சான்றிதழ் வழங்கி மருத்துவ இடங்களை ஒதுக்கியதில் முழு விசாரணை நடத்தவில்லை. யாரையும் கைது செய்யவில்லை.
போலி சான்றிதழ் தயாரித்தவர் யார். ஏஜெண்டுகள் யார் என விசாரணையே நடக்கவில்லை. இதில் கல்லுாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளவரை கொண்டு வந்து புதுச்சேரியில் இறக்கி, வெற்றி பெறலாம் என பா.ஜ.,வினர் நினைக்கின்றனர். இதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.