/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
ADDED : ஆக 14, 2025 01:11 AM

ஹதேனாக்களின் இரண்டாம் பகுதியான நடு மார்பு சுவாசத்துடன் இணைந்த மத்யம் பிராணாயாமம் செயல் முறைகளை கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்த வாரம் மேல் மார்பு பகுதி சுவாசத்துடன் இணைந்த ஆத்யம் பிராணாயாமம் செயல்முறையை பார்ப்போம்.
மகாமுத்திரை நிலை-1 வஜ்ராசனத்தில் அமர்ந்து நீண்ட சுவாசத்தை இழுக்க வேண்டும். சுவாசத்தை வெளியேற்றிக் கொண்டே முன்னால் குனிந்து தலையை கால் முட்டிக்கு முன் தரையில் வைக்கவும். சுவாசிப்பது நின்றபின் கைகளை மேலே துாக்கி எஞ்சிய காற்றை முன்னும், பின்னும் அசைத்து வெளியேற்றிடவும்.
நுரையீரல் முழுவதும் காலியாக இருக்கும். சுவாசத்தை உள்ளிழுத்தபடி மேலே எழுந்து வஜ்ராசனத்திற்கு வரவும். இருமுறை திரும்ப செய்யவும்.
மகாமுத்திரை நிலை-2 வஜ்ராசனத்தில் அமர்ந்து, கைகளை கோர்த்து தோளை இழுத்து நீண்டு சுவாசித்து, மூச்சை வெளியேற்றியபடி தலை தரையை தொடும் வரை குனியவும். எல்லா காற்றும் வெளியேறிய பின் கைகளை மேலே துாக்கி, நுரையீரலின் மேல் பகுதியில் எஞ்சிய காற்றை வெளியேற்றவும்.
மூச்சை உள்ளிழுத்தபடி, கைகறை கோர்த்து வைத்து, திரும்ப வஜ்ராசனத்தில் அமரவும். இருமுறை திரும்ப செய்யவும்.
பாலாசனம் வஜ்ராசனத்தில் இருந்து முன்னே குனிந்து, ஷஷாசனத்தில் வைப்பதுபோல் கை முட்டிகளை கால் முட்டிக்கு அருகே தரையில் வைத்து பின்பு கைகளை சற்று முன்னே கொண்டு சென்று பிரித்து வைக்க வேண்டும்.
கால் முட்டிகளை சரி செய்து மார்பை கீழே வைத்து பிட்டத்தை துாக்கியபடி இருக்க வேண்டும். தலையை வலது பக்கம் திருப்பி 6 முறை மூச்சை இழுக்கவும். பின், தலையை இடது பக்கம் திருப்பி 6 முறை மூச்சை இழுக்கவும். பின், மெதுவாக எழுந்து ஷஷாசனத்திற்கு வந்து பின் வஜ்ராசனத்தில் அமரவும்.
பரிபூரண ஷஷாசனம் வஜ்ராசனத்தில் மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றியபடி முன்னே குனிந்து, தலையை கால்முட்டிக்கு முன் தரையில் வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தபடி பிட்டத்தை மேலே துாக்கி உச்சந்தலை கீழ் படும்வரை துாக்கவும்.
மூச்சை வெளியிட்டபடி பிட்டத்தை குதிகால்கள் மேல் வைக்கவும். அடுத்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே வஜ்ராசனத்திற்கு வரவும். இருமுறை திரும்ப செய்யவும்.
மேல் மார்பு (கழுத்துப்பட்டை) சுவாச பயிற்சியை அடுத்தவாரம் பார்ப்போம்...

