ADDED : ஜன 18, 2025 05:42 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
புது பஸ் நிலையம் எதிரே உள்ள அவரின் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சாய்சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், நேரு எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.,
உப்பளம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அவைத் தலைவர் அன்பானந்தம், ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு
புதுச்சேரி அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா குயவர்பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள மாநில அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாநில செயலாளர் ஓம் சக்திசேகர் மாலை துாவி மரியாதை செய்தார்.
முத்தியால்பேட்டை
அ.தி.மு.க., துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முத்தியால்பேட்டை மணி கூண்டில் எம்.ஜி.ஆர்., உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதிய நீதி கட்சி
புதிய நீதி கட்சி சார்பில், அதன் தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.