UPDATED : நவ 15, 2026 07:30 PM
ADDED : நவ 15, 2026 07:30 PM

ப ுதுச்சேரி: புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், மலர், காய் கனி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேளாண் அமைச்சர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
புதுச்சேரியில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் மலர் மற்றும் காய் கனிகள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 37வது மலர் மற்றும் காய்கனிகள் கண்காட்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சட்டசபையில் உள்ள வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
இதில் வேளாண்துறை செயலர் ரவிப்பிரகாஷ், கலெக்டர் குலோத்துங்கன், போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங், வேளாண் இயக்குநர் ஜெயசங்கர், புதுச்சேரி நகராட்சி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலை பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் ஜனவரி 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் தாவரவியல் பூங்காவில் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏனாமில் ஜனவரி 6 முதல் 9 வரையும், மாகேவில் ஜனவரி 8 முதல் 11 வரையும், காரைக்காலில் பிப்ரவரி 5 முதல் 7 வரை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சிக்காக புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் 40,000 ஆயிரம் அலங்கார மற்றும் மலர்ச் செடிகள் உற்பத்தி செய்து வளர்க்கப்பட்டுள்ளன. கண்காட்சியின் சிறப்பையும் அழகையும் மேம்படுத்தும் வகையில் பெங்களூரு, புனே மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் காடியம் ஆகிய இடங்களில் புகழ்பெற்ற தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் நர்சரிகளில் இருந்து அரிய வகை, வெளிநாட்டு மற்றும் சிறப்பு அலங்கார செடிகளை கொள்முதல் செய்து காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
