/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வௌ்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் உயிர் தப்பினார்
/
வௌ்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் உயிர் தப்பினார்
வௌ்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் உயிர் தப்பினார்
வௌ்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் உயிர் தப்பினார்
ADDED : டிச 15, 2024 05:53 AM

கரைக்கால்: காரைக்கால் அரசலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை பார்வையிட சென்ற அமைச்சர் திருமுருகன், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார்.
காரைக்காலில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
மேலும், தமிழகப் பகுதி நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அரசலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஊழியப்பத்து -அத்திப்படுகை கிராமங்களை இணைக்கும் நடைபாலத்தில் இடதுபுற இணைப்பு சாலையில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த அமைச்சர் திருமுருகன், நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில், அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் பாலத்தை பார்வையிட்டார்.
அமைச்சர் திருமுருகன் ஊழியப்பத்து கிராமம் வழியாக பாலத்தின் மீது ஏறி நடந்து சென்றார். கும்மிருட்டாக இருந்த நிலையில், நடந்து சென்றபோது, இடதுபுற இணைப்பு சாலை திடீரென உள்வாங்கி, சரிந்து விழுந்ததில், அமைச்சர் நிலை தடுமாறினார். உடனடியாக சுதாரித்த பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சரை பாதுகாப்பாக மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று சுமார் 5 மீட்டர் நீளம் அளவிற்கு தார் சாலை வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆற்றில் வெள்ள நீர் குறைந்த உடன் முற்றிலுமாக உடைப்பு சரிசெய்யப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும். நடைபாலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழுதடைந்த பாலத்தை எம்.எல்.ஏ.,க்கள் தியாகராஜன், சிவா ஆகியோர் பார்வையிட்டனர்.