ADDED : ஆக 13, 2026 06:52 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள 4 ரேஷன் கடைகளை அமைச்சர் சிவக்கொழுந்து, நேற்று ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கினார்.
லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள 4 ரேஷன் கடைகளை அமைச்சர் சிவக்கொழுந்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, ரேஷன் கடைகளில் உள்ள சிவப்பு மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, பொருட்களின் தரம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ரேஷன் கடைகளில் இருந்த மக்களிடம் ரேஷன் பொருட்கள் பெறுவதில் ஏதேனும் சிரமம் உள்ளதா, கைரேகை பதிவு தொடர்பான பிரச்னைகள், பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என குறைகளை கேட்டறிந்து, அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு தடையின்றி, உரிய அளவு மற்றும் தரத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தினார். பின், பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கினார்.
ஆய்வின்போது சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ் குமார், குடிமைப் பொருள் வழங்கல் துறை தாசில்தார் சரவணன், ரேஷன் கடை சங்க நிர்வாக இயக்குநர் வேல்முருகன் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.
