ADDED : செப் 28, 2026 08:22 PM
வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் இரு இடங்களில் குடிநீர் திட்டப் பணிகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
ஊசுடு தொகுதிக்குட்பட்ட பொறையூர்பேட் மற்றும் தொண்டமாநத்தம் பேட் ஆகிய இரு இடங்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று நடந்தது.
பொறையூர் பேட்டில் தற்போது செயல்படாமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும்.
மேலும் தொண்டமாநத்தம் பேட் ஐயனார் கோவில் வளாகத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கும் பூமி பூஜை விழா நடந்தது.
விழாவில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,பங்கேற்று பூமிபூஜை செய்து பணிகளைத் துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரி, உதவிப் பொறியாளர் சிவானந்தம், இளநிலைப் பொறியாளர் கார்த்திக், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், உதவி பொறியாளர் சத்தியநாராயணன், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
