UPDATED : நவ 14, 2026 06:06 PM
ADDED : நவ 14, 2026 06:06 PM

வில்லியனுார்: வில்லியனுார் மற்றும் மங்கலம் தொகுதி கோவில் திருப்பணிக்கு அறநிலையத்துறை சார்பில், ரவிக்குமார் எம்.எல்.ஏ., காசோலையை திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
வில்லியனுார் தொகுதி பெரியபேட் படைவேட்டு அம்மன் கோவில் திருப்பணி துவங்கி, போதிய நிதி இல்லாததால் தடைபட்டது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இக்கோவில் திருப்பணியை மீண்டும் துவங்க ரவிக்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ. 5 லட்சம் பெற்று, அதற்கான காசோலையை கிராம கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் நேற்று வழங்கினார்.
மேலும், முதல்வர் ரங்கசாமி ஆணையின் படி, திருக்காஞ்சி நாகமுத்து மாரியம்மன் கோவில், கோட்டைமேடு அகோர மாரியம்மன் கோவில், ஆரியப்பாளையம் பாரதி நகர் பாலமுருகன் கோவில், தனத்துமேடு துலுக்கானத்தம்மன் கோவில்களின் திருப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தலா ரூ.2:5 லட்சத்திற்கான காசோலைகளை அந்தந்த கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
முன்னாள் சேர்மன் பாலமுருகன், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
