/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்று இடம் கோரி எம்.எல்.ஏ., உண்ணாவிரதம்
/
மாற்று இடம் கோரி எம்.எல்.ஏ., உண்ணாவிரதம்
ADDED : செப் 24, 2025 05:57 AM

புதுச்சேரி : வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை விரிவாக்கத்திற்கு நிலம் அளித்தவர்கள், வாய்க்கால் வீதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி, சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை, மரப்பாலம் சந்திப்பிலிருந்து கொம்பாக்கத்திற்கு வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை வழியாக பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் சென்று வருகின்றனர். அச்சாலை குறுகி இருந்ததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்தன.
இதையடுத்து, சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்த அரசு, அங்கு குடியிருந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என, உறுதியளித்தது. இதையடுத்து, அங்கு வசித்து வந்தவர்கள், சாலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, நிலம் கையப்படுத்தப்பட்டு, புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
சாலை விரிவாக்க பணி முடிவடைந்து, பல மாதங்களாகியும், அரசு உறுதியளித்தபடி, இதுவரையில் மாற்று இடம் வழங்கவில்லை.இதேபோல், ஜெயமூர்த்தி ராஜா நகர், பெரிய வாய்க்கால் வீதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி, கூட்டத் தொடரில் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்து, முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., சம்பத் தலைமையில் மரப்பாலம் சந்திப்பு அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.எதிர்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சிவக்குமார் உள்ளிட்ட முதலியார்பேட்டை மற்றும் வேல்ராம்பட்டு பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.