/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
15 நிமிடங்கள் எம்.எல்.ஏ., 'சஸ்பெண்டு' புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு
/
15 நிமிடங்கள் எம்.எல்.ஏ., 'சஸ்பெண்டு' புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு
15 நிமிடங்கள் எம்.எல்.ஏ., 'சஸ்பெண்டு' புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு
15 நிமிடங்கள் எம்.எல்.ஏ., 'சஸ்பெண்டு' புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு
ADDED : மார் 25, 2025 09:22 PM
புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏ., 15 நிமிடம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சட்டசபை உறுதிமொழி குழு தலைவராக நேரு எம்.எல்.ஏ, இருந்தார். இவருக்கும், சபாநாயகருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து சபாநாயகர், உறுதிமொழி குழு தலைவர் பதவியிலிருந்து நேருவை நீக்கினார்.
இந்த விவகாரம் சட்டசபையில் சபாநாயகர், நேரு எம்.எல்.ஏ., மோதலாக நேற்று மாறியது. சட்டசபையில் பூஜ்யநேரத்தை தொடர்ந்து சபாநாயகர் செல்வம், சட்டசபை குழுக்களுக்கு தற்போதைய தலைவர்கள், உறுப்பினர்கள் இந்த ஆண்டும் நீடிக்கப்படுவதாக அறிவித்து கொண்டு இருந்தார்.
அப்போது எழுந்த நேரு எம்.எல்.ஏ., குழு தலைவர்கள், உறுப்பினர்கள் பெயர் விபரத்தை தெரிவிக்க வேண்டும் என கோரினார்.
சபாநாயகர் செல்வம், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டவர்களே இந்த ஆண்டும் நீடிக்கின்றனர் என்றார். சட்டசபை உறுதிமொழிக்குழுவுக்கு தலைவர் மாற்றியதை அறிவிக்கவில்லையே என, நேரு எம்.எல்.ஏ., மீண்டும் கேள்வி எழுப்பினார்.
சட்டசபை உறுதிமொழி குழு தலைவராக பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார் என, சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் ஆவேசமடைந்த நேரு, இந்த சபைக்கு, சபாநாயகர் ஒரு அவமான சின்னம். தான் தோன்றித்தனமாக நடக்கிறார் என தொடர்ந்து ஒருமையில் சபாநாயகரை விமர்சித்து பேசினார். இதனால் சபாநாயகர் செல்வம், அவரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவரை சஸ்பெண்ட் செய்வதாக உத்தரவிட்டார். மேலும் சபை காவலர்களை அழைத்து அவரை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக இழுத்து சபையிலிருந்து வெளியேற்றினர்.
தொடர்ந்து அமைச்சர் சாய்சரவணக்குமார் தனது துறைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி குறுக்கிட்டு, சஸ்பெண்டு செய்யப்பட்ட நேரு எம்.எல்.ஏ.,வை மீண்டும் அவைக்கு அழைக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம், சபையில் எம்.எல்.ஏ.,க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விதிகள் உள்ளது. அவை முன்னவர் ஒருமையில் பேசியதை மன்னித்து அழைப்பு விடுக்க கோரியதால், நேரு எம்.எல்.ஏ.,வை சபைக்கு அழைக்கிறேன் என தெரிவித்தார். இதையடுத்து நேரு சபைக்கு வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனால் 15 நிமிடங்களில் மீண்டும் சபை நிகழ்வில் நேரு எம்.எல்.ஏ., பங்கேற்றார்.