/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குப்படுத்தும் விவகாரம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
/
விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குப்படுத்தும் விவகாரம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குப்படுத்தும் விவகாரம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குப்படுத்தும் விவகாரம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
ADDED : பிப் 23, 2024 03:35 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகரம் மற்றும் கிராம திட்டமிடல் விதிகளில் திருத்தம் செய்து சட்டசபையில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் நேற்று, புதுச்சேரி நகரம் மற்றும் கிராம திட்டமிடல் (திருத்தம்) சட்ட முன் வரைவை, முதல்வர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார். அப்போது நடந்த விவாதம்:
எதிர்கட்சித் தலைவர் சிவா: ஏற்கனவே ஒழுங்குபடுத்துதல், சரிபடுத்துதல் என்ற வார்த்தையால் பல பிரச்னைகள் உருவானது. விதிகளுக்கு கட்டுப்பட்டு கட்டடம் கட்டியவர்கள் ஏமாந்தவர்களா? விதிகளை மீறியவர்களுக்கு சலுகை காட்டுவது ஏன்?
நேரு: அண்ணா சாலையில் ஒரு கட்டடத்தை எந்த அனுமதியும் இன்றி கட்டியுள்ளனர். அதை இடிக்க வேண்டும்.
எதிர்கட்சித் தலைவர் சிவா: அனுமதியின்றி கட்டப்பட்ட எல்லா கட்டடத்தையும் இடிக்க வேண்டும்.
சிவாவிற்கு ஆதரவாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், செந்தில்குமார் பேசினர். நேரு எம்.எல்.ஏ.,வும் எழுந்து பேசியதால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
முதல்வர் ரங்கசாமி: அனுமதியில்லாமல் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. எத்தனை வீடுகளை இடிக்க முடியும்? இது, தனிப்பட்ட நபருக்கு கொண்டு வரப்படும் சட்டம் அல்ல.
ஏழைகள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறோம். கட்டடம் கட்டியவர்களுக்கு அனுமதி இல்லாததால் வங்கி கடன் வசதி கிடைப்பதில்லை. இதை ஒழுங்குபடுத்தும்போது, கடன் கிடைக்கும். அரசுக்கும் வருவாய் வரும்.
ராமலிங்கம்: சட்ட திருத்தம் இல்லாததால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சட்ட திருத்தம் நிறைவேறுவதை தடுக்காதீர்கள்.
சபாநாயகர் செல்வம்: சாதாரண, ஏழை மக்கள் பயன் பெற இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மக்கள் பயன் பெறுவதை தடுக்க வேண்டாம் என்றார்.
தொடர்ந்து, சட்ட முன்வரைவு குரல் ஓட்டெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.