/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
50க்கும் மேற்பட்ட 'சபலிஸ்ட்டு'களிடம் ரூ.4 லட்சம் பறிப்பு; கடலுார் பெண் கைது
/
50க்கும் மேற்பட்ட 'சபலிஸ்ட்டு'களிடம் ரூ.4 லட்சம் பறிப்பு; கடலுார் பெண் கைது
50க்கும் மேற்பட்ட 'சபலிஸ்ட்டு'களிடம் ரூ.4 லட்சம் பறிப்பு; கடலுார் பெண் கைது
50க்கும் மேற்பட்ட 'சபலிஸ்ட்டு'களிடம் ரூ.4 லட்சம் பறிப்பு; கடலுார் பெண் கைது
ADDED : செப் 22, 2024 01:48 AM
புதுச்சேரி: உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என, சமூக வலைத்தளத்தில் விளம்பரம் அனுப்பி 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கடலுார் பெண்ணை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்; புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர். கடந்த 13ம் தேதி, உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்தது. அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
மறு முனையில் பேசிய பெண், எந்த மாதிரியான பெண் வேண்டும் எனவும், அதற்கான பணம் குறித்தும் பேசினார். அடுத்த சில நிமிடத்தில், விக்னேஷ் மொபைல்போனுக்கு சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பி, இதில் யார் வேண்டும் என தேர்ந்தெடுக்க கூறினார்.
விக்னேஷ் தனக்கு பிடித்த ஒரு பெண் புகைப்படத்தை தேர்வு செய்து அனுப்பினார்.
இந்த பெண் வேண்டும் என்றால் ஒரு இரவுக்கு ரூ. 10 ஆயிரம் எனவும், அட்வான்ஸ் ரூ. 5,000 அனுப்பினால் தான் அவரை அனுப்பி வைப்பேன் என, கூறியுள்ளார். அப்பெண் கூறியபடி, அவரது ஜிபே எண்ணுக்கு ரூ. 5,000 அனுப்பினார்.
முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு இடத்தில் காத்திருக்கும்படி கூறினார். விக்னேஷ் 5 மணி நேரமாக காத்திருந்தும் அங்கு யாரும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விக்னேஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் பணம் அனுப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு, வங்கி கணக்கு மூலம் விசாரித்தபோது, கடலுாரைச் சேர்ந்த காயத்ரி, 35; என, தெரியவந்தது.
காயத்ரியை கைது செய்த போலீசார் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, கடந்த 6 மாதங்களில் 50க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 4 லட்சத்திற்கு மேல் பணம் பறித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராமில் இருந்து புதுச்சேரியைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை டவுன்லோடு செய்து, யாரேனும் பெண்கள் வேண்டும் என கேட்டால், அந்த புகைப்படங்களை அனுப்பி மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட காயத்ரி தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களின் படங்களை பதிவிட வேண்டாம். மர்ம நபர்கள் அதனை டவுன்லோடு செய்து தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
காயத்ரி வங்கி கணக்கில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருகிறோம்.
இணைய வழி விளம்பரத்தை நம்பி குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது; வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வேலை, முதலீட்டிற்கு அதிக லாபம், ேஷர் மார்க்கெட், ஆதார் கார்டு பயன்படுத்தி போதை பொருள் கடத்தல், மும்பை சைபர் கிரைம் போலீஸ் என, கூறுவதை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்' என்றனர்.