விக்கிரவாண்டி பாப்பனப்பட்டு மேம்பாலம் பணி தொய்வு :சீரமத்திற்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
விக்கிரவாண்டி பாப்பனப்பட்டு மேம்பாலம் பணி தொய்வு :சீரமத்திற்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
UPDATED : செப் 05, 2026 10:17 PM
ADDED : செப் 05, 2026 07:42 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு பைபாஸ் சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணி தொய்வாக நடப்பதால், வாகன ஓட்டிகள் சீரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் தஞ்சாவூர்-கும்பகோணம் நான்கு வழி சாலை பிரியும் இடத்தில், சென்னை- திருச்சி புறவழிச் சாலையில் மேம்பாலம் உள்ளது.
பெருகி வரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டும் திருச்சி-சென்னை சாலையில் கூடுதலாக மேம்பாலம் அமைக்கவும், பாப்பனப்பட்டு கிராம பொதுமக்கள் பை-பாஸ் சாலையை பாதுகாப்பாக கடக்க அப்பகுதியில், சப்-வே அமைக்கவும், நகாய் 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தேவகோட்டையை சேர்ந்த மீனாள் அண்ட் கோ நிறுவனம், நகாயுடன் ஒப்பந்தம் செய்து, கடந்தாண்டு செப்டம்பரில் பணியை துவக்கியது.
சாலையின் இரு புறமும் சர்வீஸ் சாலைகள், சப்-வே அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது மேம்பாலம் அமைக்க பில்லர்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. மேலும், சப்-வே வை இணைக்க சென்னை-திருச்சி மார்க்கத்தில் தடுப்பு கட்டைகள் அமைத்து மண் கொட்டி மேடாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், திருச்சி-சென்னை மார்க்கத்தில் தடுப்பு கட்டைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மண் கொட்டி மேடாக்கும் பணி துவங்கவில்லை. இதனிடையே சாலையின் இருபுறமும் போடப்பட்ட சர்வீஸ் சாலைகள் கந்தலாகி, அதில் வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த பணிகளில், 45 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளன. பெரும்பாலான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பைபாஸ் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், ஆங்காங்கே நடைபெற்று வரும் மேம்பால பணிகளால் மெதுவாகவே செல்கின்றனர்.
சர்வீஸ் சாலையில் பழுதுகள் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது வரும் வாரத்தில் சர்வீஸ் சாலைகளை சீரமைத்து விடுவோம் என தெரிவித்தனர். தற்பொதைய நிலவரப்படி இன்னும் ஓராண்டு காலம் பணிகள் நீடிக்கும் என தெரிய வருகிறது.
மக்கள் நலன் கருதி அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் மற்றும் சப்-வே பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
