/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் குழப்பம்
/
வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் குழப்பம்
ADDED : ஏப் 03, 2025 07:45 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே இணைப்பு சாலை மூடப்பட்ட நிலையில், அங்கு, வழிகாட்டி பலகை வைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை- சேந்தநாடு நெடுஞ்சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்பு சாலையின் குறுக்கேயும், டோல்கேட்டில் இருந்து உளுந்துார்பேட்டை நகர் மேம்பாலம் வழியாக வாகனங்கள் சென்றதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன.
இதை தடுக்க, இணைப்பு சாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை நடுவே பேரிகார்டுகள், சிமெண்ட் கட்டைகளை அமைத்து, போக்குவரத்து போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர்.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் உளுந்துார்பேட்டை டோல்கேட்டை கடந்து விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக, நகருக்குள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
இந்நிலையில், டோல்கேட் அருகே இணைப்பு சாலை குறுக்கே வைத்திருந்த தடுப்புகளை சிலர் அகற்றியதால் விபத்து ஏற்பட துவங்கின. கடந்த மார்ச் 21ம் தேதி இணைப்பு சாலை குறுக்கே சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதி, 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, சாலை நடுவே வழிப்பாதை முழுவதும் பேரிகார்டுகள், சிமெண்ட் கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டன.
இணைப்பு சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்லாமல், விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக சென்று உளுந்துார்பேட்டை நகர் பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டது.
இணைப்புச் சாலை பகுதியை டோல்கேட் நிர்வாகம் முழுவதுமாக மூடியது.
ஆனால், உளுந்துார்பேட்டைக்கு செல்லும் சாலையை காட்டும் வழிகாட்டி பலகையை மாற்றி வைக்கவில்லை. நகர் பகுதிக்கு செல்ல விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.
இதை தெரிவிக்கும் வகையில் எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இணைப்பு சாலை வழியை மூடினாலும், உளுந்துார்பேட்டை செல்லும் வழிகாட்டி பலகையை பார்த்து, எப்படி செல்வது என தெரியாமல் குழப்பத்தில் வாகன ஓட்டிகள் பலர் திணறி வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

