எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பாடப்பிரிவு விருப்பங்களை மாற்ற இன்று கடைசி
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பாடப்பிரிவு விருப்பங்களை மாற்ற இன்று கடைசி
ADDED : செப் 01, 2026 11:43 PM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பாடப்பிரிவு விருப்பங்களை மாற்ற இன்று (2ம் தேதி) கடைசி நாள் என, சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்டாக் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் எம்.பி.பி.எஸ்., மற்றும் வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லுாரியில் பி.டி.எஸ்., படிப்பிற்கான கலந்தாய்வு மற்றும் இட ஒதுக்கீடு ஆகியன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, முதற்கட்ட இட ஒதுக்கீட்டிற்கான பாடப்பிரிவு விருப்பங்களில் மாணவர்கள் தேவைப்பட்டால் மாற்றங்கள் அல்லது புதுப்பித்தல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (2ம் தேதி மதியம் 1 மணிக்குள் மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவு விருப்பங்களை இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்.
மேலும், விவரங்களுக்கு மாணவர்கள் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் 0413-2655570 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
