/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் 9ம் நாளாக காத்திருப்பு போராட்டம் பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாமல் மக்கள் தவிப்பு
/
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் 9ம் நாளாக காத்திருப்பு போராட்டம் பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாமல் மக்கள் தவிப்பு
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் 9ம் நாளாக காத்திருப்பு போராட்டம் பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாமல் மக்கள் தவிப்பு
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் 9ம் நாளாக காத்திருப்பு போராட்டம் பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : செப் 03, 2025 05:44 AM

புதுச்சேரி : நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உள்ளாட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது.
புதுச்சேரி அரசு, மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய 5 நகராட்சிகளும், பாகூர், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், வில்லியனுார், மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு, நிரவி மற்றும் திருப்பட்டினம் ஆகிய 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன.
இவற்றில் மேலாளர், பொறியாளர்கள், கண்காணிப்பாளர், பிளம்பர், எலக்ட்ரிஷியன், மெக்கானிக், ெஹல்பர், துப்புரவு பணியாளர் என 54 பிரிவுகளில் 3,500 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் தற்போது 1,500 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால், பணியில் உள்ளவர்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 7வது ஊதியக்குழுவின் 33 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு அரசே பென்ஷன் வழங்க வேண்டும்.
கிராம பஞ்சாயத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக அந்தஸ்து பெற்ற 247 பேருக்கு பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலாளர் முதல் கடைநிலை ஊழியர்களான துப்புரவு பணியாளர்கள் வரை ஒட்டு மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளில் ஒட்டுமொத்தமாக பணிகள் ஸ்தம்பித்துள்ளது.
குறிப்பாக பிறப்பு, இறப்பு, திருமண சான்று பதிவு சான்று பெற முடியாமல், பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.
மேலும், 'எல்' மற்றும் 'யூ' கழிவு நீர் வாய்க்கால்கள் பராமரிப்பின்றி, கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிடப்பாமலும், ஒப்பந்ததாரர்களுக்கு தொகை வழங்காததாலும், பணிகள் தேக்கமடைந்துள்ளது.அதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் போராட்டகுழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, 33 மாத நிலுவைத் தொகை உடன் வழங்குவதாகவும், பிற கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறினார். மேலும், நிலுவைத் தொகையை உடன் வழங்க அரசாணை வெளியிட நிதித்துறை செயலருக்கு உத்தரவிட்டார்.
முதல்வரின் வாக்குறுதியை ஏற்றுக் கொண்ட போராட்டக்குழுவினர், நிலுவைத் தொகை வழங்குவதற்காக அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என, அறிவித்தனர்.
அதன்படி 9ம் நாளான நேற்று, சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
முதல்வர் கூறியபடி நேற்று மாலை வரை அரசாணை வெளியாகாததால், 10ம் நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் பாதிக்கம் நிலை ஏற்பட்டுள்ளது.