/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி கழிப்பறைகள் ரூ.2 கோடியில் புதுப்பிப்பு
/
நகராட்சி கழிப்பறைகள் ரூ.2 கோடியில் புதுப்பிப்பு
ADDED : டிச 28, 2024 05:34 AM

புதுச்சேரி : புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கழிப்பிடங்கள் மூன்று நாட்கள் 24 மணி நேரம் திறந்திருக்க நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சமுதாய கழிப்பிடங்களை புதுப்பிக்க ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளில் உள்ள 90 பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்களை ரூ.2 கோடி செலவில் புதுப்பித்து அழகு படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரிக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி நகராட்சி கடற்கரை சாலை பழைய சாராய ஆலை, நேரு சிலை சதுக்கம், லே கபே எதிரில், டூப்லெக்ஸ் சிலை சதுக்கம், பழைய துறைமுக வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து கழிப்பிடங்களும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பித்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுவர்களில் பல வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் உள்ள இந்த 5 கழிப்பறைகளும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வரும் 30ம் தேதி முதல், ஒன்றாம் தேதிவரை மூன்று நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையர் கந்தசாமி பணிகளை செய்துள்ளார்.
மேலும் டூப்லெக்ஸ் சிலை அருகில் உள்ள கழிப்பிட வௌிப்புற சுவற்றில், சுற்றுலாப் பயணிகள் 'செல்பி' எடுத்துக் கொள்ளும் வகையில் இறக்கை ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை போடுவதற்காக கடற்கரைச் சாலையில் 40 இடங்களில் நவீன ரக குப்பை தொட்டிகள் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

