புதுச்சேரி பல்கலையுடன் நாகாலாந்து என்.ஐ.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி பல்கலையுடன் நாகாலாந்து என்.ஐ.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 28, 2026 08:13 PM
புதுச்சேரி: கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், புதுச்சேரி பல்கலைக்கழகமும நாகாலாந்து என்.ஐ.டி., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் துரிதப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை நெட்வொர்க் திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் முதன்மை மைய நிறுவனமாகவும் , புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி நாகாலாந்து ஆகியவை துணை நிறுவனங்களாகவும் இணைந்து செயல்படுகின்றன.
சர்வதேச உறவுகள் துறை டீன் ஆனந்த்குமார் வரவேற்புரையாற்றார். திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஏழுமலை மற்றும் என்.ஐ.டி. நாகாலாந்தின் பேராசிரியர் ஜோதி பிரசாத் போரா ஆகியோர் இக்கூட்டாண்மையின் முக்கியத்துவம், கூட்டு ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கினர்.
துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், சிக்கலான அறிவியல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள கூட்டு ஆராய்ச்சி மிக அவசியமாகும். இது மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறினார்.
என்.ஐ.டி நாகாலாந்தின் இயக்குநர் இளையபெருமாள் பேசும்போது, இத்திட்டத்தில் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து பங்கேற்கும் ஒரே நிறுவனம் என்.ஐ.டி நாகாலாந்து மட்டுமே. இரு நிறுவன பேராசிரியர்களும் மாணவர்களும் கூட்டுத் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டார்.
புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் குணசேகரன், இயக்குநர்கள் தரணிக்கரசு, நடராஜன், நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, டீன் ஜாபர் அலி உட்பட பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பிரசாந்த் கூறினார்.
