/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய புத்தக கண்காட்சி புதுச்சேரியில் 19ம் தேதி துவக்கம்
/
தேசிய புத்தக கண்காட்சி புதுச்சேரியில் 19ம் தேதி துவக்கம்
தேசிய புத்தக கண்காட்சி புதுச்சேரியில் 19ம் தேதி துவக்கம்
தேசிய புத்தக கண்காட்சி புதுச்சேரியில் 19ம் தேதி துவக்கம்
ADDED : டிச 07, 2025 06:35 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 19ம் தேதி தேசிய புத்தக கண்காட்சி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்க ஒருங்கிணைப்பாளர் பாஞ்ராமலிங்கம் கூறியதாவது:
எங்கள் புத்தக சங்கம், சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 29-வது தேசிய புத்தக கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் வரும் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
19ம் தேதி காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார். சபாநாயகர் செல்வம், ஜான்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்க தலைவர் முத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்கள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்களுக்கு, தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுால்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். இவ்வாண்டு புத்தகம் வாங்கும் வாசகர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் ரூ.1,000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
பல ஆண்டுகளாக பங்கேற்கும் புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா விருதுகள், கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தவர்களுக்கு புத்தக சேவா ரத்னா விருதுகள் வழங்கப்படவுள்ளன.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ், ஆயிரத்தின் மடங்கில் நட்சத்திர சான்றிதழ் வழங்கப்படும். ரூ.10,000 அதிகமாக புத்தகம் வாங்குபவர்களுக்கு புத்தகச் சிறந்த நட்சத்திரம் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
கண்காட்சியையொட்டி, தினமும் பேச்சு, கவிதைப் போட்டிகள் மாலை 6:00 மணிக்கு நடக்க உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9087872555 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். செயலர் அரங்கமுருகையன், உறுப்பினர் விஜயகுமார் உடனிருந்தனர்.

