ADDED : செப் 04, 2026 08:20 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழா மற்றும் 2025–2026ம் ஆண்டிற்கான கண்தான விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே கண்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, 40 கண் கருவிழிகளை தானமாக பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியதற்காக வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனாருக்கு சிறப்பு கண்தான விருது வழங்கி, பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்ட அதிகாரி வர்ஷினி, அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி வெங்கடேஷ், அரவிந்த் கண் வங்கி மருத்துவ இயக்குநர் ஜோஸ்வின் கிறிஸ்டி ஆகியோர் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொடர்ந்து அரவிந்த் கண் வங்கி சங்கம் சார்பில் கண் தானத்தை ஊக்குவித்து சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவத் துறையினர் மற்றும் தன்னார்வ நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு கண்தான விருதுகள் வழங்கப்பட்டது.
