ADDED : ஜூன் 25, 2026 03:24 AM
புதுச்சேரி: புதுச்சேரி அமெச்சூர் நெட்பால் சங்கம் சார்பில், 5வது தேசிய அளவிலான 'பாஸ்ட் 5' சீனியர் தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் (ஆண்கள் மற்றும் பெண்கள்) போட்டிகள் இன்று துவங்குகிறது.
புதுச்சேரி அமெச்சூர் நெட்பால் சங்கம் சார்பில், இந்திய நெட்பால் கூட்டமைப்பு, உலக நெட்பால், ஆசியநெட்பால் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரத்துடன் முத்தியால்பேட்டையில் உள்ள வாசவி சர்வதேச பள்ளியில் இன்று (25ம் தேதி) மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது.
விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, போட்டிகளை துவக்கி வைக்கிறார். அமைச்சர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, ஆறுமுகம், வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகிக்கின்றனர்.இந்திய நெட்பால் கூட்டமைப்பின் தலைவர் சுமன் கவுஷிக், பொதுச் செயலாளர் விஜேந்தர் சிங், வாசவி சர்வதேச பள்ளி தலைவர் வேணுகோபால், புதுச்சேரி அமெச்சூர் நெட்பால் சங்கத் தலைவர் பார்த்திபராஜன், செயலாளர் அனிதா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இன்று (25ம் தேதி) துவங்கி, 28ம் தேதி வரை நடக்கும் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 520 நெட்பால் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 104 பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அமெச்சூர் நெட்பால் சங்கத்தினர் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
