ADDED : ஜூன் 28, 2025 03:03 AM
புதுச்சேரி : புதுச்சேரி பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்ககம் சார்பில், 19வது தேசிய புள்ளி விவர தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்திய புள்ளியியலின் தந்தை பி.சி. மஹலானோபிஸ் பிறந்த நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ம் தேதி, தேசிய புள்ளி விவர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, 19வது தேசிய புள்ளி விவர தினம் இந்த ஆண்டு '75வது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு' என்ற கருப்பொருளைக் கொண்டு நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்ககம் சார்பில், நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை அரசு செயலர் சுந்தரேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் புள்ளி விவர இயக்குநரக வளாகத்திலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலை, பெரியார் சிலை சந்திப்பு, திருவள்ளுவர் சாலை, லெனின் வீதி வழியாக சென்று மீண்டும் புள்ளிவிவர இயக்குநரகம் வந்தடைந்தது.
முன்னதாக, துறையின் இயக்குநர் ரத்னகோஷ் கிஷோர் சவுரே 'புள்ளிவிவர பங்களிப்பின் முக்கியத்துவம்' குறித்து விளக்கவுரையாற்றினார். ஊர்வலத்தில், துணை இயக்குனர்கள் படுகு ஈஸ்வர ராவ், காங்கேயன் மற்றும் துறையின் புள்ளி விவர அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட 150 கல்லுாரி மாணவ, மாணவியர் சீருடையுடன் கலந்து கொண்டனர்.
