/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலில் புதுச்சேரி கடைசி இடம் அதிகாரிகள் மீது நாஜிம் எம்.எல்.ஏ., பகீர் குற்றச்சாட்டு
/
ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலில் புதுச்சேரி கடைசி இடம் அதிகாரிகள் மீது நாஜிம் எம்.எல்.ஏ., பகீர் குற்றச்சாட்டு
ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலில் புதுச்சேரி கடைசி இடம் அதிகாரிகள் மீது நாஜிம் எம்.எல்.ஏ., பகீர் குற்றச்சாட்டு
ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலில் புதுச்சேரி கடைசி இடம் அதிகாரிகள் மீது நாஜிம் எம்.எல்.ஏ., பகீர் குற்றச்சாட்டு
ADDED : மே 08, 2025 01:21 AM
புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் புதுச்சேரி கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த மோசமான சூழலுக்கான முழு பொறுப்பும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளைத்தான் சாரும் என மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம் எம்.எல்.ஏ., பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை மதிப்பீட்டுக் குழு கூட்டம், அதன் தலைவர் நாஜிம் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
தலைமை செயலக கருத்தரங்கு அறையில் நடந்த இக்கூட்டத்தில் அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், செந்தில்குமார், நாக தியாகராஜன், ராமலிங்கம், பல்வேறு துறைகளின் செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகள், புதுச்சேரி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து குழுவின் தலைவர் நாஜிம் பேசியதாவது:
மத்திய அரசின் நிதியுதவியில் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான தொகை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.620 கோடியாக இருந்த நிதியுதவி, தற்போது ரூ.400 கோடியாக குறைந்துள்ளது.
இந்தாண்டு, ரூ.220 கோடி நிதி குறைந்து போனதற்கு காரணம், காலத்தோடு பணிகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொண்டது தான்.
மத்திய நிதியுதவி திட்டங்களின் விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். இதற்கென தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்தி, செயலர்களை நியமிக்கும்போது, மிக விரைவாக பணிகளை மேற்கொள்ள முடியும். கூடுதலாக மத்திய அரசின் நிதியைப் பெற்று பல்வேறு பணிகளை செய்யலாம்.
இதேபோல் வீடுகட்டும் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே பணம் பெற்று வீடுகளை கட்டாமல் உள்ளனர். ஏழை மக்கள் என்பதால் தான் அரசு மானியம் தருகிறது. ஆனால் அதற்கு வட்டி போட்டால் எப்படி நியாயமாக இருக்க முடியும்.
தற்போது வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புகிறவர்கள். ஏற்கெனவே வாங்கிய தொகையை செலுத்திவிட்டு, புதிய திட்டத்தின் கீழ் பயன்பெற அனுமதிக்க வேண்டும்.
புதுச்சேரி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடிக்கு மேல் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். ரூ. 620 கோடிக்கு பணிகள் தொடங்கப்பட்டன. காலத்தோடு பணிகள் தொடங்கி நடைபெறாததால், பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. இதன் காரணமாக வெறும் ரூ.175 கோடிக்குத்தான் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னமும் பல திட்டங்கள் தொடக்க நிலையில் இருந்து வருகிறது. 'இன்னும் இரு மாதங்களுக்குள் இப்பணியை முடித்துவிடுவோம்' என அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு மேல் மத்திய அரசு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை நீடிக்க முடியாது என கூறிவிட்டது.
இதன் காரணமாக ரூ.375 கோடி அளவிலான பணிகளை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். 'ஸ்மார்ட் சிட்டி'யை பயன்படுத்திக் கொண்டதன் தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் புதுச்சேரி கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த மோசமான சூழலுக்கான முழு பொறுப்பும் அதிகாரிகளைத் தான் சாரும்.
விரைவான திட்ட அறிக்கை தயாரிப்பு, குறிப்பிட்ட நேரத்தில் வேலையை தொடங்குதல், முடித்தல் என அனைத்திலும் அதிகாரிகள் கோட்டை விட்டதே இதற்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

