சிவப்பு கார்டு, மஞ்சள் கார்டுகளாக மாற்றம் குறித்து நேரு எம்.எல்.ஏ., விளக்கம் கேட்பு
சிவப்பு கார்டு, மஞ்சள் கார்டுகளாக மாற்றம் குறித்து நேரு எம்.எல்.ஏ., விளக்கம் கேட்பு
ADDED : செப் 04, 2026 11:23 PM
புதுச்சேரி: உருளையான்பேட்டை, தட்டாஞ்சாவடி தொகுதியில் சிவப்பு ரேஷன் கார்டுகள் மஞ்சள் கார்டுகளாக மாற்றம் குறித்து நேரு எம்.எல்.ஏ., குடிமைப்பொருள் துறை இயக்குனரிடம் கேட்டறிந்தார்.
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை, உருளையன் பேட்டை, தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மஞ்சள் நிற குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது.
சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்ட வந்த மகளிர் உதவித் தொகைகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களை அழைத்துக் கொண்டு உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு, நேயம் மக்கள் கழக பொதுச் செயலாளர் விநாயகம் ஆகியோர் குடிமை பொருள் வழங்கல் துறைக்கு சென்று அங்கு துறை இயக்குனர் முத்துமீனாவை சந்தித்து இதுகுறித்து கேட்டறிந்தனர்.
