/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில் துவங்க தடையில்லா ஆணை கால வரம்பிற்குள் வழங்காவிட்டால் அபராதம் சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றம்
/
தொழில் துவங்க தடையில்லா ஆணை கால வரம்பிற்குள் வழங்காவிட்டால் அபராதம் சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றம்
தொழில் துவங்க தடையில்லா ஆணை கால வரம்பிற்குள் வழங்காவிட்டால் அபராதம் சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றம்
தொழில் துவங்க தடையில்லா ஆணை கால வரம்பிற்குள் வழங்காவிட்டால் அபராதம் சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றம்
ADDED : செப் 19, 2025 03:11 AM
புதுச்சேரி: தொழில் துவங்க குறித்த கால வரம்பிற்குள் தடையில்லா சான்று வழங்காவிட்டால், அபராதம் விதிக்கும் வகையில் சட்டசபையில் நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தொழில்கள் துவங்கினர். காலப்போக்கில், சலுகைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டது. மேலும், புதிய தொழில் துவங்க அரசு துறைகளின் அனுமதி கிடைப்பதிலும் காலதாமதமாகியது. இதனால் புதுச்சேரியில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனைத் தவிர்க்க, தொழில் துவங்குவதற்கான அனுமதிக்கு ஒற்றை சாளர முறையை அறிவித்த போதிலும், அனுமதி கிடைப்பதில் தாமதமாகியது. இதனால், தொழில் துவங்குவதற்கான அனுமதி வழங்க காலவரம்பை நிர்ணயித்து வணிகம் செய்தலை எளிதாக்க புதுச்சேரி அரசு சட்ட முன்வரைவை கொண்டு வந்தது.
இந்த சட்ட முன்வரைவில் பல்வேறு திருத்தங்களுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்ட மசோதா நேற்று சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்தார்.
மசோதாவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் வணிகத்தை எளிதாக்க மேலும் சீரமைப்புகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதில், சேவைகள் வழங்கும் சட்டத்தில் காலவரம்பை வரையறுத்தல் முக்கிய சீரமைப்பில் ஒன்று. இந்த சட்ட மசோதா தேவையற்ற அனுமதிகளை ஒதுக்கி, வணிக சூழலை பாதிக்கும் கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிர்வாக சீரமைப்பு கொண்டுள்ளது.
இச்சட்டத்தின்படி, புதுச்சேரி அரசில் உள்ள தொழில், மின்சாரம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல், வருவாய், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தடையில்லா ஆணை வழங்க 5 முதல் அதிகபட்சமாக 21 நட்கள் வரை காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கால வரம்பை மீறினால் சட்ட பிரிவு 8 (1)ன்படி அபராதம் விதிக்க மசோதா வழி செய்துள்ளது.
புதிய சலுகைகள் நகராட்சி மற்றும் கிராம, கொம்யூன் பஞ்சாயத்து அமைப்புகள் வழங்கும் வர்த்தக உரிமம் 5 ஆண்டிற்கு செல்லும். கள ஆய்வு தேவையில்லை. தொழில்முனைவோருக்கு அனுமதிக்கப்பட்ட நிலப் பயன்பாடு உரிமங்கள் உடனடியாகவும், எளிதாகவும் வழங்கப்படும்.
குடியிருப்பு, வணிக மற்றும் வேளாண்மை மண்டலங்களில், நில பயன்பாட்டை மாற்றத் தேவையின்றி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தொடங்கலாம்.
தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், தொழில் மண்டலங்களிலும் தொழில் எஸ்டேட்டுகளிலும் அனுமதியின்றி அமைக்கலாம்.
தொழில்கள் அமைக்க குறைந்தபட்ச சாலை அகலம் 5 மீட்டரில் இருந்து 4.5 மீட்டராக குறைக்கப்படும். அனைத்து கட்டட வகைகளுக்கும் கட்டட அனுமதி மற்றும் இருப்பு சான்றிதழ் இணைய வழியில் வழங்கப்படும். 6 குடியிருப்பு யூனிட்டுகள் கொண்ட குடியிருப்புகள், 500 ச.மீ. வரை வணிக மற்றும் வணிக கட்டடங்களுக்கு இருப்பு சான்றிதழ் தேவையில்லை.
தொழிற்சாலை, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதி. 50 பணியாளர்களுக்கு கீழ் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, புதுவை கடைகள் நிறுவனங்கள் சட்டம், 1964ல் இருந்து விலக்கு. தீ பாதுகாப்பு தடையில்லா சான்றிதழ் காலக்கெடு 3 ஆண்டாக நீட்டிக்கப்படும்.
மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளுக்கு நேரடி கண்காணிப்புடன் ஆன்லைன் விண்ணப்பம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகத் தொடக்கத்தை எளிமைப்படுத்த, குறிப்பிட்ட அனுமதிகள் மற்றும் ஆய்வுகளில் இருந்து 3 ஆண்டு விலக்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை அமைச்சர் நமச்சிவாயம் அறிமுகப்படுத்தி முன்னிலைப்படுத்தினார்.
சபாநாயகர் செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி சட்டம் நிறைவேறியதாக அறிவித்தார்.