/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஜம்ப்டு டிபாசிட்' முறையில் புது மோசடி
/
'ஜம்ப்டு டிபாசிட்' முறையில் புது மோசடி
ADDED : டிச 12, 2024 06:13 AM
சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
புதுச்சேரி:'ஜம்ப்டு டிபாசிட்' என்ற முறையில் புதிய வகை சைபர் கிரைம் மோசடி துவங்கி உள்ளதாக, போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
நாடு முழுதும் பல்வேறு வழிகளில் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகிறது. தற்போது புது விதமான 'ஜம்ப்டு டிபாசிட்' மோசடி துவங்கி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மர்ம நபர் ஒரு சிறிய தொகையை உங்களது வங்கி கணக்கிற்கு கூகுள் பே, போன்பே போன்ற யு.பி.ஐ., மொபைல் அப்ளிகேஷன் மூலம் அனுப்பி வைப்பர். பணம் வந்ததற்கான எஸ்.எம்.எஸ்., வரும். எங்கிருந்து பணம் வந்திருக்கிறது என தெரிந்து கொள்ள முயற்சிப்பர். அதற்குள் பணம் அனுப்பிய மர்ம நபர் 'வித்ட்ரால் ரெக்யூஸ்ட்' அனுப்புவார்.
அவசரமாக யு.பி.ஐ., செயலியை திறந்து ரகசிய எண்ணை பதிவு செய்தவுடன் வங்கியில் இருந்து பெரிய அளவிலான பணம் ஒரே நிமிடத்தில் எடுத்து விடுவர். கொத்து கொத்தாக 'ஜம்ப்டு டிபாசிட்' முறையில் பணம் இழந்து வருகின்றனர். இதில் இருந்து தப்பிக்க பணம் வந்துள்ளது என எஸ்.எம்.எஸ்., வந்தால் உடனே யு.பி.ஐ., செயலியை திறக்க கூடாது. குறைந்தபட்சம் 30 நிமிடம் பொறுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால், வித்ட்ரால் ரெக்யூஸ்ட் காலாவதி ஆகி விடும்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'உங்களது வங்கி கணக்கில் தவறுதலாக பணம் வந்துள்ளது. அந்த பணம் உங்களுடையது கிடையாது என்றால் 2 என்ற எண்ணை அழுத்தவும் என கூறுவர். எண் அழுத்தியவுடன் கன்பார்ம் செய்ய மர்ம நபர் அனுப்பிய ஓ.டி.பி., எண் கூறவும் என தெரிவித்து, வங்கியில் இருந்தும் பணத்தை எடுத்துவிடுவர்.
சாதாரண பேஸ்புக், வாட்ஸ்ஆபில் நோட்டிபிகேஷன் வந்தாலே உடனே பார்க்கும் பழக்கம் உள்ளது. இந்த உளவியல் ரீதியிலான பழக்கத்தை பயன்படுத்தி இந்த மோசடி நடக்கிறது' என்றனர்.