/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
/
புதுச்சேரி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2025 06:47 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி, கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று களை கட்டியது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கும் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன.
சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மூலவர் சன்னிதியில், ராஜ அலங்காரத்தில் மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.
நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கோவிலில் இருந்து ஆம்பூர் மற்றும் மறைமலை அடிகள் சாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாாக இருந்ததையொட்டி, தடுப்புக்கட்டைகள் அமைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. பாதுகாப்பிற்கு போலீசார், நிறுத்தப்பட்டிருந்தனர்.
கோவில் நடை மதியம் 2:00 மணிக்கு மூடப்பட்டு, மதியம் 3:00 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இரவு பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்த பிறகு நடை மூடப்பட்டது.
இதேபோல காந்தி வீதி - வரதராஜ பெருமாள் மற்றும் வேதபுரீஸ்வரர்; மிஷன் வீதி - காளத்தீஸ்வரர் மற்றும் கவுசிக பாலசுப்ரமணியர்; முத்தியால்பேட்டை - கற்பக விநாயகர், பொன்னு மாரியம்மன் மற்றும் ஏழை மாரியம்மன்; ராமகிருஷ்ணா நகர் - லட்சுமி ஹயக்ரீவர்; வில்லியனுார் - திருக்காமீஸ்வரர், தென்கலை வரதராஜ பெருமாள், முதலியார்பேட்டை- வன்னிய பெருமாள், பெரிய காலாப்பட்டு - பாலமுருகன் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
நகரப்பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், நள்ளிரவு மற்றும் காலையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.