ADDED : ஏப் 29, 2015 01:45 AM
புதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக்கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர். புதுவை அரசியலார்; தமிழாசிரியராகப் பணியாற்றியவர். புரட்சிக்கனல் தெறிக்கும் இவரது பாடல்கள், தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளைக் கண்டிப்பன.குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசு முதலான பல கவிதை நுால்களை இவர் படைத்துள்ளார். புரட்சிகவி பாரதிதாசன், 29.4.1891ல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், லட்சுமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் சுப்புரத்தினம். 1920ம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.பாரதிதாசன், சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது.தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லுாரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுாரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினர் கல்லுாரித் தமிழாசிரியாரானார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருந்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால், கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.தன் நண்பர்கள், பாடு என்று கூற, கவிஞர் 'எங்கெங்குக் காணினும் சக்தியடா' என்று ஆரம்பித்து இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே, 'ஸ்ரீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் 'கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டசபை உறுப்பினராக 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 ஜூலை 29ல் அண்ணாவால் கவிஞர் 'புரட்சிக்கவி' என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 பொற்காசும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பாரதிதாசன் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான 'பிசிராந்தையார்' என்ற நாடக நுாலுக்கு 1970ல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990ல் பொது உடமையாக்கப்பட்டது. கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.
வலியோர் சிலர் எளியோர்தமைவதையேபுரி குவதா? மகராசர்கள் உலகாளுதல்நிலையாமெனும் நினைவா? உலகாளஉ னது தாய்மிகஉயிர்வாதை யடைகிறாள்!உதவாதினி ஒரு தாமதம்உடனேவிழி தமிழா!
-- பாரதிதாசன்
13 வயதில் பாடிய பாடல்
ஒருமுறை பாவேந்தரின் பெரியம்மா, வெளியூரிலிருந்து வந்தபோது வாழைப்பழங்கள் கொண்டு வந்திருந்தார். இவருக்கும் இவர் தம் அண்ணனுக்கும், ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து விட்டு, மீதிப் பழங்களைப் பழங்காலத்தில் மூடி, அறையில் வைத்திருந்தார். இருவருக்கும் சமபங்காகத் தராத பெரியம்மா, '' அறைக்குள் இருக்கும் பழங்கள் எல்லாம் உனக்குத் தான்; அப்புறமாக யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொள்'' என்று பாவேந்தரின் அண்ணனிடம் தெரிவித்தார்.இதை அறிந்த பாவேந்தர் அறைக்குச் சென்றார். வாழைப் பழங்களை எடுத்தார்; அத்தனைப் பழங்களையும் தின்றார். பழங்கள் இருந்த இடத்தில் தின்ற பழத்தோல்களை வைத்துவிட்டு, யாரும் அறியாமல் வெளியில் வந்து விட்டார்.பெரியம்மா மூத்த பிள்ளையை நினைவுறுத்த, அறைக்குச் சென்று அவர் பழங்களைத் தேடினார் அங்குத் தோல்கள் மட்டுமே இருக்கக்கண்டு திடுக்கிட்டு, பெரியம்மாவிடம் கூறினார். பாவேந்தரை அழைத்து கேட்டார் பெரியம்மா. 'ஆம் நான்தான் தின்றேன்' என்று துடுக்குத் தனமாகப் பதில் அளித்தார் பாவேந்தர். செய்தி தந்தைக்கு எட்டியது; தந்தையார் வினாவிற்கு விடையாகப் பாவேந்தர் ஒன்றும் பேசாது, நடந்த நிகழ்ச்சியைக் கவிதையில் எழுதிக் கொடுத்தார்.
பாரதியுடன் முதல் சந்திப்பு
கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குத் திருமணம் நடந்தது. மாயவரம் திருமணப் பந்தலில் பாட்டுக்கச்சேரி நடந்தது. பாவேந்தரும் கணீரென்ற அமுதக்குரலில் ''வீர சுதந்திரம் வேண்டி நின்றார்-பின்னர் வேறொன்று கொள் வாரோ?''என்ற பாரதியாரின் பாடலைப் பாடினார். அங்கு பாரதியாரும் இருந்தார். பாரதியார் யாரென்று பாவேந்தர்க்குத் தெரியாது. பாரதியார் 'நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ?' என்று வினவினார். பாவேந்தர் 'கொஞ்சம்' என்று கூற, 'உணர்ந்து பாடுகிறீர்கள்' என்றார் பாரதியார். அப்பொழுது வேணு நாய்க்கர் 'அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே?' என்று குறிப்பிட்டு, பாவேந்தர்க்குப் பாரதியாரை அறிமுகப்படுத்தினார்.
அறிஞரிடம் இசைப்பயிற்சி
பாவேந்தர் இலக்கிய இலக்கணங்களைச் சாரம் திருப்புளிச்சாமி, பெரியசாமி, பங்காரு பத்தர் போன்றோரிடம் கற்றார். இதைப் போலவே, இவர் இசையறிவைப் பிரெஞ்சுக் கல்லுாரிப் பேராசிரியர் சுப்பிரமணிய அய்யர் என்னும் இசை அறிஞரிடம் முறையாகப் பெற்றார்.
தேசிய இயக்கத்தில் தீவிரப்பங்கு
இந்திய நாடு விடுதலை பெறவேண்டும் என்ற சுதந்திரத் தாகம் நாடு முழுவதும் பரவி இருந்தது. அந்நாளில் பாவேந்தர் தேசிய இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். அரவிந்தர், வ.வே.சு.அய்யர், வரதராசுலு, மாடசாமி போன்றோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். கதர்த் துணிகளைத் தோளில் சுமந்து வீதி வீதியாகச் சென்று விற்பனை செய்தார்.
பதுமைக்குள் துப்பாக்கி
பாரத விடுதலைப் பயிருக்கு உரமிட்டு வளர்ந்தது புதுவை. விடுதலை வீரருக்கு வேண்டிய கைத்துப்பாக்கிகள் பல, பாரதமாதா பதுமைகளுள் மறைத்து வைத்துச் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு பல்வேறு காலங்களில் 'பாரத மாதா' பதுமைகளில் பிரெஞ்சு நாட்டுக் கைத் துப்பாக்கிகள் சென்னைக்குக் கொண்டு வந்த நிகழ்ச்சியையும், அதனால் ஏற்பட்ட வம்பு சண்டையையும் பாவேந்தர் குறிப்பிடுகிறார்.
தமிழ்தாய் வாழ்த்து
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயேமாண்புகள் நீயே என் தமிழ் தாயே,வீழ்வாரை வீழாது காப்பவள் நீயேவீரனின் வீரமும் வெற்றியும் நீயே,தாழ்ந்திடும் நிலையினில் உனைவிடுப்பேனோ,தமிழ்ன்எந் நாளும் தலைகுனி வேனோசூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்தோன்றுடல் நீ உயிர் நான்மறப்பேனோ?செந்தமிழே! உயிரே! நறுந்தேனேசெயலினை மூச்சினை உனக்களித் தேனேநைந்தா யெனில் நைந்து போகுமென் வாழ்வுநன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!முந்திய நாளினில் அறிவும் இலாதுமொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீதுசெந்தாமரைக் காடு பூத்தது போலேசெழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பாவேந்தர் இயற்றிய தமிழ்தாய் வாழ்த்துப்பாடல்
புதுச்சேரி அரசு G.O.MS.No:20 dtd 28.12.1971(அரசிதழ் 4.1.1972) ஆணையின்படி அரசு விழாக்களிலும் பள்ளிகளிலும் இசைக்கப்படுகிறது.பாரதிதாசனின் பணிகள் ஆசிரியர் பணி - ஆசிரியராய் அலுவல் பார்த்த ஆண்டுகள் 37. திங்கள் 3, நாட்கள் 20. அலுவலர் பார்த்த பள்ளிகள் 15. (காரைக்கால், புதுச்சேரி)
பத்திரிகை பணி
1. தேச சேவகன், 2. தேசோபகாரி 3. தேச பக்தன் 4. ஆனந்த் போதினி 5. ஆத்ம சக்தி, 6. துய்ப்ளேக்சு, 7. தாய் நாடு, 8. புதுவை முரசு, 9. கவிதாமண்டலம், 10. முல்லை 11. குயில்.
அரசியல் பணி
1955 - இல் புதுவை பகுதி இந்திய அரசில் இணைந்த பின் முதல் முதலாகச் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முன்னணி கட்சி சார்பில் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு உறுப்பினர் ஆனார். தற்காலிகப் பேரவைத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அறிஞர்களின் பாராட்டு
முதுமையிற் புகுந்துள முரண்களை மாற்றிப்புதுமையிற் பாடும் புரட்சி கவிஞன்- நாமக்கல் கவிஞர்
உயிரில் உலகும் உயிரினமும் எல்லாம்செயிரில் செழுந்தமிழில் செப்ப - அயிரிலதாய்
வாய்மை வளரறிவை வற்புறுத்தி வாழ்புலவன்துாய்மனத்தன் சுப்புரத்தினம்.- சோமசுந்தர பாரதியார்.
ஆவேசத்தையும் உணர்ச்சியையும்வெள்ளமாகக் கொட்டும் உயிர்க்கவிபாரதிதாசன் - தமிழ்நாட்டின் பொக்கிஷம்- வ.ரா.
இனிய எளிய நடையில் இவரது பாக்கள் பாடிப்போர்க்கு இன்பம் பயக்கும், பழைய ஆசாரங்களிலும் மதங்களிலும் ஊறிக் கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சி கவி.- கவிமணி தேசிய விநாயகம்.
ஆனை நடையும் அரிமாப் பெருமிதமும்கோனையும் சாடிக் குமுறுரையும் - தானையேதாக்கினு மஞ்சாத் தறுகண்ணும் மேலாடைச்சேக்கையும் பாரதிதாசன்-தேவநேயப்பாவாணர்.
பாரதியார் கூறும் வீரத்தமிழ்ச் சொல்லின் சாரத்தைப் பாரதிதாசன் பாடல்களில் சிறப்பாகக் காணலாம். கருத்து வேற்றுமையுடையவர்களும் பாரதிதாசன் கவிப் புலமைக்குத் தலைசாய்த்து வணங்குகிறார்கள்.- பரலி சு. நெல்லையப்பர்.
இருள்சூழ்ந் திருந்த இவ்வைய முழுவதும்எழுங்க தி ரான இளைஞன் பாரதிஎழுந்த கதிர்முன் மானிடச்சாதிக்குஇரத்தம் ஊட்டினார் பாரதிதாசன்.- கண்ணதாசன்.
வானெழுந்த ஞாயிறவர் அவரொளியைப் பெற்றுமறிகடல் சூழ் உலகத்தில் தொடுவானில் தோன்றும்கூனெழுந்த நிலவு நான்- வாணிதாசன்.
பாவேந்தர் பார்புகழும் பாரதி தாசனார்.மூவேந்தர் போற்று முயர் மூதறிஞர் - நாவேந்தும்நல்ல நுாற்றாண்டு விழா நானிலத்தில் ஓங்கியருட்செல்வமுடன் வாழி செழித்து-திருமுருக கிருபானந்த வாரியார்.
125வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்
பாவேந்தர் பாரதிதாசன் 125வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், பாரதிதாசன் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து, பெருமாள் கோவில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், ஆய்வு மையத்தில் காலை 10:00 மணிக்கு, மலரஞ்சலி, இசை நிகழ்ச்சி நடக்கிறது.
மயிலம் ஸ்ரீ சுப்ரமணியர் துதியமுது
புதுச்சேரிக்குத் தெற்கே திண்டிவனத்திற்கு அருகில் உள்ளது மயிலம் எனும் ஊர். மயில மலையில் குடிகொண்டு இருப்பவர் முருகக்கடவுள். தொடக்க நாளில் முருகன் மீது பக்தி பரவசத் துடன் விளங்கினார் பாவேந்தர். இந்நுால் மயிலம் முருகக் கடவுளின் பெருமையை எடுத்துரைக்கும் நுாலாகும். முப்பது பாடல்கள் உள்ளன. பாவேந்தர் தம்மைத் தலைவியாகவும், முருகப்பெருமானைத் தலைவனாகவும் கொண்டு பாடியதாகும். விநாயகர் காப்பு, விநாயகர் துதி, சிவபெருமான் துதி, திருமால் துதி, சரஸ்வதி துதி, அவையடக்கம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, மயிலமலைச் சிறப்பு, தலைவி துாது போக்கல், மனதுக்கினி துரைத்தல், தலைவி பாங்கியிடம் கூறல், பாரத நாட்டின் விடுதலை வேண்டல், நெஞ்சுக்குறுதி கூறல், நெஞ்சுக்கு நீதி கூறல், தலைவி வண்டினைத் துாது போக்கல், நெஞ்சுக்குத் தெளிவு கூறல் ஆகிய தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. பாடல்கள் யாவும் ராகம், தாளம், மெட்டு வடிவங்களில் உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியில் பாவேந்தர் தம் இயற்பெயரான கனக சுப்புரத்தினம் என்ற பெயரை இணைத்துப் பாடுவதை அறியலாம். கோபம் தணித்த பாவேந்தர் புதுச்சேரியில் வாழ்ந்தபோது பாரதியார் தம் மனைவி செல்லம்மாளுடன் கோபம் கொண்டு வெளியே போய்விட்டார். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை பாரதியார். இச்செய்தியை அறிந்த பாவேந்தர் பல இடங்களில் தேடி, பின்பு புதுச்சேரி புகைவண்டி நிலையத்தில் கண்டார். பாவேந்தரைக்கண்ட பாரதியாருக்கு முகம் மலர்ந்தது. பாரதியாரைச் சமாதானம் செய்து, 'புஷ்' என்ற கைவண்டியில் அழைத்து வந்து, இல்லத்தில் மகிழ்வினை ஏற்படுத்தினார் பாவேந்தர்.கதர் ராட்டினப் பாட்டுஸ்ரீ.சி.சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதிய இந்நுால் காசி லஷ்மண் பிரசாத் என்பவரால் 1930ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. விலை அணா ஒன்றே கால். பாரத தேசத்தில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கக் கருத்தினை வலியுறுத்துவது. பாரத நாட்டின் சிறப்பு, காந்தியடிகளின் கதர்க் கொள்கை, தேசபக்தர்களின் கடமை போன்ற கருத்துக்களை எடுத்துரைப்பது.
பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள்
*அகத்தியன் விட்ட புதுக்கரடி*அமைதி*அழகின் சிரிப்பு (கவிதை நூல்)*இசையமுதம் (இரண்டாம் பாகம்)*இசையமுதம் (முதல் பாகம்)*இசையமுது (கவிதை நூல்)*இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)*இருண்ட வீடு (கவிதை நூல்)*இருண்ட வீடு*இளைஞர் இலக்கியம்*உயிரின் இயற்கை*உரிமைக் கொண்டாட்டமா?*எதிர்பாராத முத்தம் (காப்பியம்)*எதிர்பாராத முத்தம்*எது பழிப்பு (1948)*ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது*கடவுளைக் கண்டீர்*கண்ணகி புரட்சிக் காப்பியம்*கதர் இராட்டினப்பாட்டு*கலை மன்றம்*கற்புக் காப்பியம்*காதல் நினைவுகள்*காதல் பாடல்கள்*காதலா? - கடமையா?*பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)*குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)*குடும்ப விளக்கு (கவிதை நூல்)*குடும்ப விளக்கு (திருமணம்)*குடும்ப விளக்கு (மக்கட் பேறு)*குடும்ப விளக்கு (முதியோர் காதல்)*குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)*குயில் பாடல்கள்*குறிஞ்சித் திட்டு*குறிஞ்சித்திட்டு (காப்பியம்)*சஞ்சீவி பர்வதத்தின் சாரல்*சேர தாண்டவம் (நாடகம்)*தமிழ் இயக்கம் (கவிதை நூல்)*தமிழச்சியின் கத்தி*தமிழியக்கம்*தமிழுக்கு அமுதென்று பேர்*தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)*தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு*திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்*தேனருவி இசைப் பாடல்கள்*நல்ல தீர்ப்பு (நாடகம்)*நீலவண்ணன் புறப்பாடு*பாண்டியன் பரிசு (காப்பியம்)*பாண்டியன் பரிசு,*பாரதிதாசன் ஆத்திசூடி (1946)*பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி (1963)*பாரதிதாசன் கதைகள்*பாரதிதாசன் கவிதைகள் (முதற்பாகம்)*பாரதிதாசன் கவிதைகள்*பாரதிதாசன் நாடகங்கள்*பாரதிதாசன் பதிப்பகம் (௧௯௫௨)*பாரதிதாசன் பன்மணித் திரள்*பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)*பிசிராந்தையார்*புகழ் மலர்கள் நாள் மலர்கள்*புரட்சிக் கவி*பெண்கள் விடுதலை*பொங்கல் வாழ்த்துக் குவியல்*மணிமேகலை வெண்பா*மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது*முல்லைக் காடு*விடுதலை வேட்கை*வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்*வேங்கையே எழுக
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.