மரத்தில் ஏறி ரூ. 4 கோடி, 4 ஸ்காட்ச் கேட்டு வட மாநில போதை வாலிபர் ரகளை
மரத்தில் ஏறி ரூ. 4 கோடி, 4 ஸ்காட்ச் கேட்டு வட மாநில போதை வாலிபர் ரகளை
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:47 PM

புதுச்சேரி: புதுச்சேரியில், தீயணைப்புத் துறை தலைமை அலுவலக வாயிலில் உள்ள மரத்தில் ஏறி, 5 மணி நேரம் ஆட்டம் காட்டிய போதை வாலிபரால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, சுப்பையா சாலை தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தின் வாயிலில் உள்ள மரத்தின் மீது நேற்று காலை 9:00 மணியளவில் வெளிமாநில வாலிபர் ஒருவர், ஏறி கீழே இறங்க மறுத்து 100 அடி உயரத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், மரத்தின் கீழே வலை விரித்தும், தீயணைப்பு வாகனத்தில் இருந்த ஏணி மூலம் மரத்தின் மீது ஏறி போதையில் இருந்த அந்த நபரை சமாதானப்படுத்தி கீழே இறக்குவதற்காக மது பாட்டிலைக் காட்டி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், இறங்க மறுத்த அந்த நபர், கீழே நின்றிருந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மீது சிறுநீர் கழித்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டார். மேலும், ரூ. 4 கோடி பணம், 4 ஸ்காட்ச் மதுபானம் கேட்டதுடன், மரத்தின் உச்சியில் அமர்ந்தபடியே தான் அணிந்திருந்த உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி கீழே எறிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அந்த வாலிபர், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்காமல் விபரீத செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், போதையின் உச்சிக்கு சென்ற களைப்பில் மரத்தின் கிளையிலேயே சாய்ந்தபடி துாங்கத் தொடங்கினார். இதையடுத்து, மதியம் 1:15 மணி அளவில், வம்பாக்கீரப்பாளையத்தில் தங்கியுள்ள உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனிஷ் கான், 26; என்பவர் துரிதமாகச் செயல்பட்டு ஆபத்தான மரத்தின் மீது ஏறி போதை வாலிபரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
அவரிடம் பேசி கவனத்தைத் திசை திருப்பி அவரது காலை மடக்கிப் பிடித்தார்.
பின், தீயணைப்பு வீரர்களை மேலே வர வழைத்து, அந்த நபரின் காலில் கயிறைக் கட்டி பத்திரமாகக் கீழே இறக்கினார். தொடர்ந்து, மரத்தின் உச்சியில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய வாலிபரை போலீசார் மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
போலீசார் விசாரணையில் ஓடிசா மாநிலம், சோனோபூர், சுகா டுங்குரிபாலியை சேர்ந்த நேத்ரா நந்தா, 40; என்பது தெரியவந்தது. இதற்கிடையே, உயிரைப் பணயம் வைத்துத் துரிதமாகச் செயல்பட்ட வம்பாக்கீரப்பாளையம் ஆனிஷ் கானின் செயலுக்கு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
