‘நோ’ வார்னிங்’ இனி ஆக் ஷன் தான் அனாதை வாகனங்களை பறிமுதல் செய்த நகராட்சி
‘நோ’ வார்னிங்’ இனி ஆக் ஷன் தான் அனாதை வாகனங்களை பறிமுதல் செய்த நகராட்சி
ADDED : செப் 07, 2026 11:35 PM
புதுச்சேரி: சாலையில் நீண்டகாலமாக போக்குவரத்திற்கு இடையூராக நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியை உழவர்கரை நகராட்சி துவக்கியுள்ளது.
புதுச்சேரியின் முக்கியச் சாலைகளிலும் தெருக்களிலும் பல ஆண்டுகளாக உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. கார், லாரி, டாடா ஏஸ் உள்ளிட்ட இந்த வாகனங்கள் யாருக்குச் சொந்தமானவை என்பதே தெரியாமல், அனாதையாகக் கிடந்து வீணாவதோடு, ஒட்டுமொத்தச் சாலையையும் ஆக்கிரமித்து பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இது குறித்து தொடர் புகார்கள் எழுந்த நிலையில் உழவர்கரை நகராட்சி அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது.
முதற்கட்டமாக, சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்கள் மீதும் நகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பல வாகனங்கள் அகற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அவர்களின் தலைமையில் இடையூறாக நின்ற வாகனங்களை, கிரேன் மூலம் அதிரடியாகத் துாக்கிச் சென்று பறிமுதல் செய்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு கூறும்போது எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. இனிமேல் எந்தக் கால அவகாசமும் வழங்கப்பட மாட்டாது. உரிமையாளர்கள் உடனடியாகத் தங்கள் வாகனங்களை அகற்ற வேண்டும்.
தவறும் பட்சத்தில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றிப் போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு வாகனங்கள் பறிமுதல் செய்து, பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்றார்.
