/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிர்வாகிகள் நியமனத்தால் என்.ஆர்.காங்., கட்சியினர் உற்சாகம் ... : முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
/
நிர்வாகிகள் நியமனத்தால் என்.ஆர்.காங்., கட்சியினர் உற்சாகம் ... : முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
நிர்வாகிகள் நியமனத்தால் என்.ஆர்.காங்., கட்சியினர் உற்சாகம் ... : முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
நிர்வாகிகள் நியமனத்தால் என்.ஆர்.காங்., கட்சியினர் உற்சாகம் ... : முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
ADDED : ஆக 01, 2025 02:27 AM

புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சி அமைப்பு ரீதியாக பலப்படுத்தப்பட்டுள்ளதால், உற்சாகமடைந்துள்ள தொண்டர்கள், சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். புதுச்சேரியில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். காங்., கட்சியில் இருந்து வெளியேறிய இவர், கடந்த 2011ல் தனிக் கட்சி துவங்கி, மூன்றே மாதத்தில் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றினார். அந்தளவிற்கு கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும், கட்சியில் அமைப்பு ரீதியாக பலப்படுத்தவில்லை. இதனால், அடுத்து வந்த 2016 சட்டசபை தேர்தலில் கட்சி தோல்வியடைந்தது.
தொடர்ந்து கட்சியில் மாநில கமிட்டி, மாவட்ட கமிட்டி, தொகுதி கமிட்டி, பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு மட்டும் அமைக்கப்பட்டது. இதனால், சோர்வடைந்த தொண்டர்கள் அடுத்தடுத்து வரும் கட்சியின் முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகளில் தங்களுக்கும் பதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாகமடைந்து கட்சி பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக 2021 தேர்தலில், பா.ஜ., கூட்டணியுடன் வெற்றி பெற்று கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி தலைமை, அதன் பிறகு கட்சி கட்டமைப்பை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளாததால், ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தது.
அதற்கான காரணத்தை ஆய்வு செய்த கட்சி தலைமை, கட்சியில் கட்டமைப்பு இல்லாததே தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்தது. அதையடுத்து, கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணியை துவங்கியது. அதற்காக, கட்சிக்கு முன்னணி அமைப்புகளான இளைஞரணி, மகளிரணி, மாணவரணி மற்றும் தொண்டரணி அமைப்புகளை ஏற்படுத்தி, அந்த அமைப்புகளுக்கு மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் வட்டார அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 12 துணை அமைப்புகள் ஏற்படுத்தி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கு பஞ்சாயத்து அளவிலான கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், ஒரு தொகுதிக்கு 365 நிர்வாகிகள் என, 30 தொகுதிகளிலும், 10 ஆயிரத்து 950 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தல் பணியை வரும் 4ம் தேதி நடக்க உள்ள கட்சியின் தலைவரான முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை மாநிலம் முழுதும் கிளை அமைப்புகள் ரீதியாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். விழாக்களில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.