/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து படிப்புகளுக்கும் இனி ஆன்லைன் விண்ணப்பம்
/
அனைத்து படிப்புகளுக்கும் இனி ஆன்லைன் விண்ணப்பம்
ADDED : மே 01, 2025 04:56 AM
புதுச்சேரி: விரைவில் அனைத்து படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ள சென்டாக் அமைப்பு, விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ் குறித்த கட் ஆப் தேதியை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லுாரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்டாக் அமைப்பின் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பம் விநியோகம் மட்டுமின்றி கவுன்சிலிங்கும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை அரசு வேகப்படுத்தி வருகின்றது.
பிளஸ்2 ரிசல்ட் வெளி வந்த பிறகு நீட் மற்றும் நான் நீட் அல்லாத என அனைத்து யூ.ஜி., படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. சென்டாக் தகவல் குறிப்பேட்டிற்காக அனைத்து கல்லுாரிகளிடமிருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் சென்டாக்கில் விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றிதழ்கள், அவை எடுக்கப்பட வேண்டிய கட் ஆப் தேதி குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:
குடியிருப்பு, குடியுரிமை, ஜாதி, விடுதலை போராட்ட வீரர் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர், விளையாட்டு வீரர்கள், காரைக்கால், மாகி, ஏனாம் மாணவர்களுக்கான பிராந்திய இட ஒதுக்கீடு சான்றிதழ், கலை, அறிவியல், வணிக படிப்பிற்கான கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சான்றிதழ்களை கடந்த ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு புதுப்பித்து எடுத்திருக்க வேண்டும்.
விவசாயி வாரிசுகள், இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வருவாய் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். இது தவிர கிறிஸ்துவ, தெலுங்கு சிறுபான்மையின மாணவர்கள் தங்களுக்கான சிறுபான்மையினர் சான்றிதழ்களையும், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தொடர்ச்சியாக அரசு பள்ளியில் படித்தற்கான சான்றிதழை விண்ணப்பிக்கும்போது சமர்பிக்க வேண்டி இருக்கும். கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க மாணவர்கள் முன் கூட்டியே இந்த சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொள்ளுவது நல்லது. இவ்வாறு சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.