/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓ.பி.சி., கணக்கெடுப்பு 95 சதவீத பணிகள் நிறைவு
/
ஓ.பி.சி., கணக்கெடுப்பு 95 சதவீத பணிகள் நிறைவு
ADDED : அக் 05, 2024 11:11 PM
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. 1968ம் ஆண்டுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
அப்போது, தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் 2011ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
கடந்த 2021ம் அக்., மாதத்துக்குள் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அரசு திரும்ப பெற்றது. இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதனையொட்டி, பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒருநபர் கமிஷன் அமைத்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என, அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2021 டிசம்பர் 17ல் அரசால் ஒருநபர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் நியமிக்கப்பட்டார்.
ஆணையம் அமைத்த 6 மாதங்களுக்குள் ஓ.பி.சி.,க்கு உரிய இடஒதுக்கீட்டை பரிந்துரைக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க கோரப்பட்டது. பணி நிறைவடையாததால் கமிஷனுக்கு சமீபத்தில் மேலும் நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது ஓ.பி.சி., கணக்கெடுப்பு கிட்டதட்ட 95 சதவீதம் முடிந்துள்ள சூழ்நிலையில் தரவுகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைத் தொகுக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
தரவைப் பதிவேற்றிய பிறகு இடஒதுக்கீட்டிற்கான பரிந்துரையுடன் அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது.