/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புது பஸ் ஸ்டாண்ட் திறந்தும் பயனில்லை; நகராட்சி - ஸ்மார்ட் சிட்டி மீது மக்கள் எரிச்சல்
/
புது பஸ் ஸ்டாண்ட் திறந்தும் பயனில்லை; நகராட்சி - ஸ்மார்ட் சிட்டி மீது மக்கள் எரிச்சல்
புது பஸ் ஸ்டாண்ட் திறந்தும் பயனில்லை; நகராட்சி - ஸ்மார்ட் சிட்டி மீது மக்கள் எரிச்சல்
புது பஸ் ஸ்டாண்ட் திறந்தும் பயனில்லை; நகராட்சி - ஸ்மார்ட் சிட்டி மீது மக்கள் எரிச்சல்
ADDED : மே 03, 2025 10:39 PM

புது பஸ் ஸ்டாண்ட்டினை பல கோடியில் கட்டி திறந்தும் எந்த பயனும் இல்லை. பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் திணறி வருகின்றன. இந்த கோணல் திட்டத்தை தீட்டி ஸ்மார்ட் சிட்டி, நகராட்சி மீதும் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த புது பஸ் ஸ்டாண்ட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நள்ளிரவில் இருந்து புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல கோடி ரூபாய் செலவில் கட்டிய புது பஸ் ஸ்டாண்ட் ஒருவழியாக திறக்கப்பட்டதால் அனைத்து போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளும் தீரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.
அவசர கோலத்தில் திறக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட்டில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுவதுமாக செய்யப்படவில்லை. புது பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் கடையில் பொருட்கள் கூட கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைகழிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க இது ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட்; நவீன பஸ் ஸ்டாண்ட் என பில்டப் கொடுக்கப்பட்டது. இங்கு போதுமான பஸ்கள் நிற்க கூட இடம் இல்லை. இதனால் அனைத்து வழி தடத்தில் செல்லும் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்ட்டிற்குள் செல்ல முடியாமல் இப்போது திணறி வருகின்றன. வேறுவழியின்றி மறை மலையடிகள் சாலையில் வரிசை கட்டி பஸ்கள் நிறுத்தி வருகின்றன.
குறிப்பாக லோக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு பஸ் வெளியே சென்ற பிறகே மற்றொரு பஸ், உள்ளே வர வேண்டியுள்ளது. மறை மலையடிகள் சாலையில் வரிசை கட்டி நிற்கும் பஸ்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பஸ் ஸ்டாண்ட்டில் சென்னை, லோக்கல், விழுப்புரம், கடலுார் என வழித்தட பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள்ளாக நிறுத்தப்பட்டன. எவ்வளவு பஸ்கள் வந்தாலும் பஸ் ஸ்டாண்டு உள்ளே தான் பஸ்கள் நிற்கும். இப்போது திறக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட்டில் எந்த வழித்தடத்திலும் பழையபடி பஸ்களை அதிக அளவில் நிறுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்.
விசாலமான பஸ் ஸ்டாண்ட்டை கோழி கூண்டு போல் சுருக்கியது தான் மிச்சம். இதுக்கு பெயர் தான் ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்டா? இதை தான், இவ்வளவு நாட்கள் ஸ்மார்ட் சிட்டியும் - நகராட்சியும் பிளான் போட்டு கட்டினார்களா என, எரிச்சடைந்து டிரைவர்களும், பொது மக்களும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பல கோடியில் ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் கட்டி திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு அவலம் நீடிக்கிறது. அதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என, சந்தானம் பட காமடி பாணியில், இதற்கு பழைய பஸ் ஸ்டாண்டே இருந்திருக்கலாம் என, பொது மக்கள், பயணிகள் புலம்பியபடி சென்றனர்.