மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
UPDATED : ஆக 31, 2026 10:00 PM
ADDED : ஆக 31, 2026 08:54 PM
புதுச்சேரி: மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படட்து.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்த்து, எதிர்க்கட்சிதலைவர் நாஜிம், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், நேரு, ஜோல் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். இது அரசு தீர்மானமாக ஏற்கப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு மாறாக, தமிழக எல்லையில் சுமார் 5 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதுடன், கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.
புதுச்சேரி மாநில மக்களின் எதிரானதாக மேகதாது அணைக்கட்டும் நடவடிக்கை உள்ளது. காவிரி பாசன மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அணை கட்டும் நடவடிக்கைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளை பாதுகாத்திட, அரசு எடுக்கும் அனைத்து நவடிகைகளுக்கும் முழு ஆரதவை இந்த சபை அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கார்த்திகேயன் (தி.மு.க.,)
கடைமடை பகுதியான நமக்கு அதிக உரிமை உள்ளது நடுவர்மன்ற தீர்ப்பு படி கர்நாடகா தண்ணீர் தரவில்லை. இதற்காக நாம் அங்கு சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து கோரிக்கையை நிறைவேவற்ற வேண்டும்.
நேரு: மேகதாது அணை மற்றும் மாநில அந்தஸ்து குறித்தும் தீர்மானம் கொடுத்துள்ளேன். ஆனால் ஒரு தீர்மானம் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து தீர்மானத்தையும் சேர்க்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி டெல்டா பகுதிக்கு சுத்தமாக தண்ணீர் வராது. எனவே இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து, அணை கட்ட அனுமதி தர வேண்டாம் என கூறுவோம்.
கார்த்திகேயன் (காங்.,):
மேகதாது, தமிழக மற்றும் புதுச்சேரியை வஞ்சிக்கின்ற திட்டம். அனைத்துகட்சிகளும் மாநில அந்தஸ்துக்கும் தீர்மானம் போட வேண்டும்.
வையாபுரி மணிகண்டன்:காரைக்காலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காவிரி நீரை நம்பியே உள்ளனர். மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியின் இயல்பான ஓட்டம் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீரின் தரம் பாதிக்க வாய்ப்புள்ளது. அரசு அணை குறித்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விக்னேஷ்வரன்:
அணை கட்டப்பட்டால், தண்ணீரி அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் மத்திய அரசிற்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
செந்தில்குமார்(தி.மு.க,.): பெங்களூருவின் குடி தேவைக்காக இந்த அணை என்று கூறுகிறது. ஆனால், பிரமாண்ட அணை கட்டி 5 ஆயிரம் ெஹக்டர் காடுகளை மூழ்கடித்து, ஒரு நதியின் இயற்கை ஓட்டத்தையே சீர்குலைப்பது எந்த விதத்தில் நியாயம். எனவே கர்நாடக அரசு அணை கட்டுவதை தவிர்த்து கதவணைகள் மற்றும் செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டல் தொழில்நுட்பம் மூலம் மாற்று தீர்வு காணலாம்.
எதிர்கட்சி தலைவர் நாஜிம்: தமிழகம், புதுச்சேரி இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இதுவரை எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே அணை கட்ட முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
சபாநாயகர் அன்பழகன்: கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காது. அணை கட்டப்பட்டால் காரைக்கால் வறட்சி மாவட்டமாக மாறிவிடும். தொடர்ந்து அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசு முன் மொழிந்த தீர்மானத்தை சபாநாயகர் அன்பழகன் குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
