/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க... உத்தரவு; உள்ளாட்சித்துறை இயக்குனர் அதிரடி
/
சாலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க... உத்தரவு; உள்ளாட்சித்துறை இயக்குனர் அதிரடி
சாலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க... உத்தரவு; உள்ளாட்சித்துறை இயக்குனர் அதிரடி
சாலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க... உத்தரவு; உள்ளாட்சித்துறை இயக்குனர் அதிரடி
ADDED : செப் 23, 2024 04:23 AM
புதுச்சேரி: அனைத்து சாலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உள்ளாட்சி துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரிக்கு அழகே அதன் நேரான நுால்பிடித்த மாதிரி இருக்கும் வீதிகள் தான். ஆனால் இன்றைக்கு நகர வீதிகள் அனைத்தும் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.
சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள், புற்றீசல் போல் அதிகரித்துள்ளதால், அகலமான சாலைகள் அனைத்தும், சந்துகள்போல் குறுகி உள்ளன. இதனால் நகர சாலைகள் அனைத்திலும் உச்சக்கட்டமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகின்றன.
சாலைகளில் நடைபாதையே காணவில்லை. நடைபாதைகளில் கடைகள் தான் முளைத்துள்ளன. இப்படி சாலையை, நடைபாதையை சொந்த வீடு போல் உரிமை கொண்டாடுவதும் புதுச்சேரியில் மட்டும் தான் நடக்கும்.
ஒருவழியாக உள்ளாட்சி துறை தற்போது அதிரடி முடிவினை எடுத்து, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக தலைமை செயலகம் எதிரே பங்க் கடையாக இருந்த கே.பி.எஸ்., காபி கடையை, பில்லர் போட்டு பக்கா கடையாக மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்தி, முழுதுமாக இடித்து தள்ளி தரைமட்டமாக்கியுள்ளது.
சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது; சமரசமும் செய்ய முடியாது என்று உறுதியாக முடிவு செய்துள்ள உள்ளாட்சித் துறை, அடுத்தகட்டமாக அனைத்து சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் பிறப்பித் துள்ளார். இந்த பட்டியல் கைக்கு வந்ததும், ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி முதலில் எச்சரிக்கப்பட உள்ளது. அதன் பிறகு இடித்து அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம் அடிக்கடி ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் நிலையில், அதனை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அருகில் உள்ள வேறு இடங்களில் மாற்று இடங்கள் கடைகளுடன் கட்டிக்கொடுத்து ஒழுங்குப்படுத்தப்பட உள்ளது.
அங்கு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான கழிவறை, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளாட்சி துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் வாயிலாகவும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.