ஜிப்மரில் எலும்பியல் தொற்று மேலாண்மை தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி
ஜிப்மரில் எலும்பியல் தொற்று மேலாண்மை தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி
ADDED : செப் 06, 2026 05:52 PM
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையின் எலும்பியல் துறை சார்பில் எலும்பியல் தொற்று மேலாண்மை என்ற தலைப்பிலான ஒருநாள் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நடந்தது.
எலும்பியல் துறை தலைவர் பிரபு, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஜெகதீஸ் மேனன், டாக்டர்கள் கோபி சங்கர், சுரேஷ்காந்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
எலும்பியல் துறை தலைவர் பிரபு பேசுகையில், ‘நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சை பலன்களை வழங்க ஆரம்பக்கட்ட நோயறிதல், ஆதாரப்பூர்வமான சிகிச்சை மற்றும் பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிகவும் அவசியம்’ என்றார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில், எலும்பியல் தொற்றுகளைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பது குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான எலும்பு-மூட்டு தொற்றுகள், விபத்து மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய தொற்றுகள், காசநோய் சார்ந்த முதுகுத்தண்டு தொற்றுகள், செயற்கை மூட்டு தொற்றுகள், நீரிழிவு பாதத் தொற்றுகள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஆகியவை குறித்து நிபுணர்களின் கருத்துரைகள் இடம்பெற்றன.
சிக்கலான உறுப்புக் காப்பு சிகிச்சை முறைகள், நவீன நோயறிதல் உத்திகள், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளின் சரியான பயன்பாடு மற்றும் மேம்பட்ட அறுவை சிகிச்சை அணுகுமுறைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
எலும்பியல் நிபுணர்கள், பேராசிரியர்கள், முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
