/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நம் செயல்பாடு பிறருக்கும் பயன் தர வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
நம் செயல்பாடு பிறருக்கும் பயன் தர வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
நம் செயல்பாடு பிறருக்கும் பயன் தர வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
நம் செயல்பாடு பிறருக்கும் பயன் தர வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 05, 2026 04:31 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவ உற்சவத்தில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நேற்று நிகழ்த்திய 20ம் பாசுர உபன்யாசம்:
திருப்பாவையில், நப்பின்னை பிராட்டியை துயிலெழுப்பும் 18, 19, 20 ஆகிய மூன்று பாசுரங்களில் 20ம் பாசுரமே கடைசிப் பாசுரம்.
இப்பாசுரத்தில் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்று தேவர்களைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்ற கேள்வி எழும். தேவர்களுக்கு, அமுதம் வேண்டும், தேவலோகப் பதவி வேண்டும், பலம் வேண்டும், ஆனால் எங்களுக்கோ உன்னையன்றி வேறு எதுவும் வேண்டாம்' என்றும், உன் அருளால் தேவர்கள் சாகாவரம் பெற்று விட்டனர்.
நாங்களோ நின்னருள் வேண்டி இப்பூவுலகில் உழன்று கொண்டிருப்பதை காண், எங்கள் துயர் போக்குவாய் என்று ஆண்டாள் நாச்சியார் கண்ணனிடம் நப்பின்னையை முன்னிறுத்திச் சொல்கிறாள்.
பக்தர்களுக்குத் துன்பம் வரும் முன் சென்று காப்பவன் கோவிந்தன். ஆகவே தான், பாசுரத்தில் முன் சென்று என்று அருளியுள்ளாள் ஆண்டாள். எந்த நிலையில் இருந்து பார்த்தாலும், அந்த நிலையைவிட 10 அங்குலம் உயர்ந்து வியாபிப்பவன் தான் நாராயணன் என்று வேதம் உரைப்பதைத் தான் கோதா பிராட்டி இங்கு, திறலுடையாய் என்ற பதத்தினாள் விளக்குகிறாள்.
உக்கம் என்றால் விசிறி. தட்டொளி என்றால் கண்ணாடி. விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து. நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.
கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை உக்கமும் தட்டொளியும் என்ற பாசுரச் சொற்கள் விளக்குகின்றன.
வைணவ சித்தாந்தப்படி, தாயார் கருணை இல்லாமல் பரமனை அடைய முடியாது என்ற தத்துவச் செய்தியை ஆண்டாள் இப்பாசுரத்தில் அழுத்தமாகவும் சொல்கிறாள்.
இவ்வாறு உபன்யாசம் செய்தார்.

