/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூதாட்டி கொலை வழக்கில் பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை
/
மூதாட்டி கொலை வழக்கில் பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 25, 2025 05:07 AM

புதுச்சேரி மூதாட்டி கொலை வழக்கில் பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சங்கர், 28; பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விநாயகவேலன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி நள்ளிரவு விநாயகவேலனை கொலை செய்யும் நோக்கத்தில் சங்கர் கையில் கத்தியுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது, விநாயகவேலனின் வீட்டில் அவரது சகோதரி முத்துலட்சுமி, பாட்டி கன்னியம்மாள், 86; மட்டும் இருந்தனர். அவர்கள் சங்கரை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்தபோது, கோபமடைந்த சங்கர், முத்துலட்சுமியை மார்பிலும், கன்னியம்மாளை முதுகிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.
படுகாயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, கன்னியம்மாள் இறந்தார்.
முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், சங்கரை கைது செய்த லாஸ்பேட்டை போலீசார, அவர் மீது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் விநாயகம் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், மூதாட்டியை கொலை செய்த சங்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.