/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்லே பால் லிட்டருக்கு 7 ரூபாய்... நஷ்டம்; உறுதிமொழி கூட்டத்தில் அதிகாரி தகவல்
/
பாண்லே பால் லிட்டருக்கு 7 ரூபாய்... நஷ்டம்; உறுதிமொழி கூட்டத்தில் அதிகாரி தகவல்
பாண்லே பால் லிட்டருக்கு 7 ரூபாய்... நஷ்டம்; உறுதிமொழி கூட்டத்தில் அதிகாரி தகவல்
பாண்லே பால் லிட்டருக்கு 7 ரூபாய்... நஷ்டம்; உறுதிமொழி கூட்டத்தில் அதிகாரி தகவல்
UPDATED : ஜூன் 12, 2025 01:24 PM
ADDED : ஜூன் 12, 2025 05:10 AM

புதுச்சேரி: பாண்லே பால் லிட்டருக்கு 7 ரூபாய் நஷ்டத்திற்கு விற்பதும், அதனை உப பொருட்கள் விற்பனை மூலம் ஈடுகட்டும் தகவல்நேற்று நடந்த சட்டசபை உறுதிமொழிக்குழு கூட்டத்தில் தெரியவந்தது.
புதுச்சேரி அரசின் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், கரும்பு விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை மற்றும் பாண்லே நிறுவனத்தின் நிர்வாக சீர்கேடு விவகாரம் பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று நடந்த சட்டபை உறுதிமொழி கூட்டத்தில் எதிரொலித்தது.
கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, ஆறுமுகம், சிவசங்கர், ராமலிங்கம், அசோக்பாபு, அதிகாரிகள் கூட்டுறவு துறை பதிவாளர் யஷ்வந்தையா, சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குநர் கோவிந்தராஜ், உதவி இயக்குநர் ஆனந்தலட்சுமி, மகளிர் மேம்பாட்டு துறை இயக்குநர் முத்துமீனா கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கூட்டுறவு துறைகளான பாண்லே, கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட வைகளை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாண்லே பால் உற்பத்தியை அதிகப்படுத்த மானிய விலையில் கறவை மாடுகள் அரசு வழங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு மாடு என்ற விதிகளை தளர்த்த வேண்டும்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். பாண்லே அரசு நிறுவனம் அல்ல. அரசின் சார்பு நிறுவனம் என்பதை ஊழியர்களுக்கு உணர்த்த வேண்டும். கையெழுத்து போட்டால் ஊதியம் கிடைக்கும் என்ற மனநிலை ஒழிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
இதற்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் யஷ்வந்தயா பதில் அளிக்கையில், பாண்லே நிறுவனம் இரண்டு ஆண்டிற்கு முன் ரூ.20 கோடி நஷ்டத்தில் இருந்தது. கொள்முதல் பாலுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருந்தது. முதல்வரின் தலையீட்டால், கடன் ரூ.10 கோடியாக குறைத்துள்ளோம். பால் கொள்முதலுக்கு உடனுக்குடன் பணம் வழங்கி வருகிறோம்.
பால் விலை உயர்த்தக் கூடாது என்ற அரசின் கொள்கை முடிவால், லிட்டருக்கு 7 ரூபாய் நஷ்டத்திற்கு பாலை விற்கிறோம். அதனை பால் உப பொருட்களில் கிடைக்கும் லாபத்தை கொண்டு ஈடு செய்கிறோம். அதற்காகவே தேசிய பால் வள வாரியம் மூலம் புதிய ஐஸ்கிரீம் பிளாண்ட் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். அது 2 ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும்.
மேலும், ஒரு ஐஸ்கிரீம் பிளாண்ட் நிறுவனத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் 'நோ ஒர்க், நோ பே' திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். கூடுதல் ஊழியர்களை கொண்டு தற்போதைய ஐஸ்கிரீம் பிளாண்டில் மூன்றாவது ஷிப்ட் செயல்படத்துவங்கியுள்ளது.
பால் கொள்முதலை அதிகரிக்க கூட்டுறவு துறை மூலம் 75 சதவீத மானியத்தில் கறவை மாடு வழங்கப்பட உள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2017- உடன் லே-ஆப் கொடுக்கப்பட்டது. ஆலை மீது ரூ.150 கோடி கடன் உள்ளது. இதில் ரூ.45 கோடி பிப்டிக், பாசிக் நிறுவனங்களிடம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு வட்டி ரூ.80 கோடி கட்ட வேண்டியுள்ளது. அந்த வட்டியை அவர்கள் தள்ளுபடி செய்தால் ஒருமுறை செட்டில்மெண்ட் கொடுக்கலாம். இல்லாவிட்டால் அவர்களை ஷேர்ஹோல்டராக சேர்த்துக்கொண்டால் பணம் கட்டவேண்டி இருக்காது. இருப்பினும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதுவரை தொழிலாளர்களுக்கு ஊதியம், இ.பி.எப்., லே-ஆப் என ரூ.53 கோடியும், விவசாயிகளுக்கு கரும்புக்கான பணம் ரூ.19 கோடி என மொத்தம் 72 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு செட்டில்மெண்ட் கொடுக்க ரூ.20 கோடி தேவை. பின்னர் ஆலையை இயக்க ரூ.20 கோடி தேவை.
அப்படியே ஆலையை இயக்கினாலும், வெறும் சர்க்கரை உற்பத்தி மட்டும் நடத்தினால் மீண்டும் நஷ்டம் தான் ஏற்படும். கரும்பில் இருந்து கிடைக்கக்கூடிய எத்தனால் உள்ளிட்ட மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே அதற்கு முன் ஆலையின் கடனை அடைத்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கான கோப்பு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாண்டெக்ஸ், பாண்பேப் போன்ற நிறுவனங்களை கைத்தூக்கி விட வேண்டும். அதற்கு, அரசின் இதர துறைகளுக்கு தேவையான துணிகளை சப்ளை செய்ய கூட்டுறவு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து சுகாதாரத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தறையில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து விவாதிக்கப்பட்டது.