/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு
/
துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 08, 2026 07:19 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி, நாளை (9ம் தேதி) ஓட்டுப்பதிவும், மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
இதையடுத்து, பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரி வந்துள்ள துணை ராணுவ படையினருடன் மற்றும் போலீசார், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
அதன்படி, புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே துவங்கிய கொடி அணி வகுப்பை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் துவக்கி வைத்து, தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் ரட்சனா சிங், சுருதி உள்ளிட்ட போலீசார் மற்றும் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு முத்தியால்பேட்டை, எல்லையம்மன் கோவில் வீதி, அக்காசாமி மடம் வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை, மகாத்மா காந்தி வீதி, நேரு வீதி, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை, மறைமலை அடிகள் சாலை, அண்ணா சதுக்கம் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதேபோல், தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி மைதானம், ராஜிவ் சதுக்கம், இந்திரா சதுக்கம், மூலக்குளம் வரையிலும், காலாப்பட்டு, ஆலங்குப்பம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

